இந்த செய்தியை கேட்க
மும்பை : மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு தீவிரமாக முயற்சித்து வரும் சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., க்கு அமைச்சரவையில் ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து பேசி, முடிவுக்கு வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இம்மூன்று கட்சிகளிடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி அமைச்சரவையில் சிவசேனாவுக்கு 16 அமைச்சர் பதவிகளும், சரத் பவாரின் தேசியவாத காங்.,க்கு 14 பதவிகளும், காங்.,க்கு 12 பதவிகளும் ஒதுக்கப்படுவதாக பேசி முடிக்கப்பட்டுள்ளதாம்.
இதே போன்று காங்.,க்கு சபாநாயகர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாம். துணை சபாநாயகர் பதவி சிவசேனாவுக்கும், சட்டசபை கவுன்சில் தலைவர் பதவி தேசியவாத காங்.,க்கும், அதன் துணை தலைவர் பதவி சிவசேனாவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவிகள் யாருக்கு என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லையாம். இது பற்றி காங்., மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், சிவசேனா முதல்வர் பதவி கேட்டு வருகிறது. 5 ஆண்டுகளும் சிவசேனாவே முதல்வர் பதவி வகிக்குமா அல்லது சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகள் ஒதுக்கப்படுமா அல்லது 3 கட்சிகளும் சம கால அளவு முதல்வர் பதவியை பங்கிட்டு கொள்ளுமா என்பதில் இதுவரை தெளிவான முடிக்கப்படவில்லை என்றார்.
அமைச்சரவை பங்கீடு குறித்து 3 கட்சி தலைவர்களும் தொடர்ந்து பேசி வருவதாகவும், இவ்வார இறுதியில் இது தொடர்பாக முடிவு இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. இறுதி முடிவு நவ.,19 அன்று அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆட்சி நீடிக்கும்
இந்நிலையில், சரத்பவார் நிருபர்களிடம் கூறுகையில், மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கான பணிகள் துவங்கி விட்டன. புதிய ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றார். வரும் ஞாயிறு அன்று, சோனியாவை சந்திக்க சரத்பவார் திட்டமிட்டுள்ளார்.
மேலும், விவசாயிகள் பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்த, கவர்னரை சந்திக்க காங்., தேசியவாத காங்கிரஸ் சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது