மஹா., திருப்பம்! சிவசேனா தலைமையில் ஆட்சி?

Updated : நவ 17, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (25+ 94)
Advertisement
மஹா., சிவசேனா, ஆட்சி, கவர்னர், சந்திப்பு, தாக்கரே, பவார்

மும்பை : மஹாராஷ்டிரா அரசியலில், மீண்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா தலைமையில், காங்கிரஸ் - தேசியவாத காங்., கட்சிகள் கூட்டணி சேர்ந்து, ஆட்சி அமைக்க திட்டமிட்டு உள்ளன. ஆட்சி அமைக்க உரிமை கோரி, கவர்னரை இன்று சந்திக்கவும், அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனாவும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றும், கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது, முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு ஒதுக்கும்படி, சிவசேனா பிடிவாதம் பிடித்தது. இதனால், ஆட்சி அமைக்கும் முடிவை, பா.ஜ., கைவிட்டது.


அழைப்பு


அடுத்ததாக, ஆட்சி அமைக்கும்படி, சிவசேனாவுக்கு, கவர்னர் அழைப்பு விடுத்தும், அவர்களால், காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதங்களை பெற முடியவில்லை. இதைத்தொடர்ந்து, சரத் பவாரின் தேசியவாத காங்., கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அக்கட்சியும், ஆட்சி அமைக்க அவகாசம் கேட்டதால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், ஆட்சி அமைப்பதற்கான முயற்சியை, காங்., தேசியவாத காங்., சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

பல சுற்று பேச்சுக்குப் பின், இவர்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க, ஆதரவு தருவதாக, காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகள் உறுதி அளித்துள்ளன. இது குறித்து, தேசிய வாத காங்., தலைவர் சரத் பவார், 74, நேற்று கூறியதாவது: சிவசேனா, காங்., தேசியவாத காங்., கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.

இந்த ஆட்சி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தொடரும்; நிலையான ஆட்சியாக இருக்கும். மஹாராஷ்டிரா சட்டசபைக்கு இடைத்தேர்தல் வரவாய்ப்பில்லை.


திட்டங்கள்


கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில், என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும், ஒவ்வொரு கட்சியின் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்தும், குறைந்த பட்ச செயல் திட்டம் உருவாக்கப்படும். குறைந்தபட்ச செயல் திட்டத்தை வடிவமைப்பது குறித்து, மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் பேச்சு நடத்திஉள்ளனர். 'சிவசேனா தலைமையில் அமையும் அரசு, ஆறு மாதங்கள் கூட நீடிக்காது' என, தேவேந்திர பட்னவிஸ் கூறியுள்ளார்.

அவரை, கடந்த சில ஆண்டுகளாகவே, எனக்கு நன்றாக தெரியும். ஆனால், அவர் ஜோதிடர் என்பது, இப்போது தான் தெரியும். 'நான் மீண்டும் பதவிக்கு வருவேன்' என, அடிக்கடி அவர் கூறுகிறார். இனி, அப்படி அவர் கூற முடியாது.

ஹிந்துத்வா கொள்கை உடைய சிவசேனாவுடன் சேர்ந்து, நாங்கள் ஆட்சி அமைக்கவுள்ளதாக சிலர் கூறுகின்றனர். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. மஹாராஷ்டிராவில் அமையும் புதிய அரசு, மதச் சார்பற்ற அரசாகவே இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, சிவசேனா, காங்., தேசியவாத காங்., கட்சியின் பிரதிநிதிகள், இன்று, மஹாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

அப்போது, மூன்று கட்சிகளும் இணைந்து, ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளன. அதற்காக, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதங்களையும், கவர்னரிடம் கொடுக்க, அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பு விடுப்பாரா அல்லது மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி தொடருமா என்பது, இன்று தெரிய வரும்.


சிவசேனாவுக்கு முதல்வர் பதவி


தேசியவாத காங்., செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது: முதல்வர் பதவியால் ஏற்பட்ட சர்ச்சையால் தான், பா.ஜ., கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறியது. எனவே, சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், சிவசேனாவைச் சேர்ந்தவர் தான் முதல்வராக இருப்பார். அதில், எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை. மக்களின் விருப்பமும் அது தான். மக்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. புதிய அரசில், காங்கிரசும் பங்கு பெறும் என நம்புகிறேன்; அப்போது தான், நிலையான அரசு அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது: சிவசேனா தலைமையில், விரைவில் புதிய அரசு அமையும். அந்த அரசு, அடுத்த, 25 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதற்கான குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மக்களின் விருப்பத்துக்கும், நலனுக்கும் முக்கியத்துவம் அளித்து, குறைந்தபட்ச செயல் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். காங்., மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'குறைந்தபட்ச செயல் திட்டத்தில், விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்களும் உள்ளன' என்றார்.


கவர்னர் கோஷ்யாரியுடன் பட்னவிஸ் சந்திப்பு


மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ், நேற்று மும்பையில், கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அப்போது, பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண உதவி அளிக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்தும்படி, அவர் வலியுறுத்தினார். பட்னவிஸ் கூறுகையில், ''பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிதியை உடனடியாக விடுவிக்கும்படி கவர்னரிடம் வலியுறுத்தினேன்; அதை, அவர் ஏற்றார்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (25+ 94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
16-நவ-201920:22:12 IST Report Abuse
sankar பொருந்தாகூட்டணி - கூடாநட்பு கூடிவந்து கெடுத்தது என்று பின்னாளில் புலம்பப்போகிறார் - திரு தாக்கரே
Rate this:
Share this comment
Cancel
Naren - Chennai,இந்தியா
16-நவ-201915:48:21 IST Report Abuse
Naren மண் குதிரைகளை நம்பி ஆற்றில் சவாரி செய்ய துணிந்திருக்கும் சிவா சேனா. அந்தோ பரிதாபம், இது அக்கரைக்கு போய் சேருமா?
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
16-நவ-201913:29:19 IST Report Abuse
Balasubramanian சிவசேனாவுக்கு தேவை தலைமை பதவி. அதை அவர்களுக்கு தந்து விட்டால் நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் அதுதானே உங்கள் குறைந்த பட்ச திட்டம்? தலை இருக்க வால் ஜோராக ஆடலாம் இனி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X