தமிழகத்தில், 'ஆன்லைன்' முறையிலான மணல் விற்பனை இணையதளத்தில், முன்பதிவு செய்வது அடிக்கடி நிறுத்தப்படுவதால், கட்டுமான துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கட்டுமான பணிக்கான மணல் விற்பனையில், முறைகேடுகளை தடுக்க, ஆன்லைன் முறை அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தம், ஒன்பது இடங்களில் உள்ள குவாரிகளில் இருந்து மணல் எடுக்கப்பட்டு, கிடங்குகளில் சேகரிக்கப்பட்டு, லாரிகளுக்கு வழங்கப்படுகிறது. மணலை பெற, லாரி உரிமையாளர்களும், பொது மக்களும், ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, மொபைல் போன் செயலி மற்றும் இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவுஇந்த சேவை, அதிகாரிகளால் முடக்கப் பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது: மணல் தேவைப்படுவோர், எப்போது வேண்டு மானாலும் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சில மாதங்களாக, வாரத்தில் வெள்ளிக்கிழமை மாலை, 4:00 மணிக்கு மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.இதற்காக, வாரம் முழுவதும் மக்கள் காத்திருக்கின்றனர். வெள்ளிக்கிழமை அன்று, 'தவிர்க்க முடியாத காரணங்களால், ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்வது, இன்று நிறுத்தப்பட்டுள்ளது' என, செயலியிலும், இணையதளத்திலும் அறிவிக்கப்படுகிறது. இதனால், மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
மாற்று ஏற்பாடு:
ஆன்லைன் வாயிலாக, மணல் விற்கும் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியாவிட்டால், அதை வெளிப்படையாக அறிவித்து விட்டு, மாற்று ஏற்பாடு செய்யலாம். அதைவிடுத்து, மக்களை இப்படி ஏமாற்றுவதை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE