கொல்லிமலை: கொல்லிமலையில், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், நபார்டு வங்கி நிதியுதவியுடன் சிறு தோட்ட திட்டம் தேவனூர், வளப்பூர், சேலூர், சித்தூர் பைல் நாடு மற்றும் பெரக்கரை நாடு, ஆகிய ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. துவக்க விழா, சித்தூர் நாடு, மேல் பூசணி குழியில் நடந்தது. சென்னை, நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் பத்மா துவக்கி வைத்தார். ஆராய்ச்சி நிறுவன செயல் இயக்குனர் அனில் குமார் பேசியதாவது: ஆறு ஆண்டுகளில், 500 சிறு மற்றும் குறு விவசாய பழங்குடி குடும்பங்கள் தலா ஒரு ஏக்கர் சொந்த நிலத்தில் பழப்பயிர், பணப்பயிர் சாகுபடி செய்ய வழிவகை செய்யப்படும். பண்ணை சார்ந்த நீராதார அமைப்புகளை உருவாக்கவும், மதிப்புக்கூட்டு பயிர்கள், சுகாதார மேம்பாடு, சந்தை வாய்ப்புகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். மேலும், 250 குடும்பங்களுக்கு பலா, மா, ஜாதிக்காய், எலுமிச்சை, நெல்லி, கொய்யா, மாதுளை, சப்போட்டா, முருங்கை, காய்கறிகள், காபிச் செடிகள் வளர்ப்பு பயிர்கள் மற்றும் தீவனப்பயிர்கள் வழங்கப்பட்டு நடவு செய்ய முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பல்லுயிர் சார்ந்த வேளாண் பெருகும் நோக்கத்திலும், பழங்குடி குடும்பங்கள் பொருளாதார மேம்பாடு அடையவும், சத்துமிக்க உணவு கிடைக்கும் வகையிலும் இயற்கை வேளாண் தொடர் வழிவகை செய்யும் நோக்கத்திலும் செயல்படுத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் தினேஷ், ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி இஸ்ரேல் ஆலிவர்கிங் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.