India,இந்தியா, #cricket | இந்தியா இன்னிங்ஸ் வெற்றி; 3 நாளில் வீழ்ந்தது வங்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி; 3 நாளில் வீழ்ந்தது வங்கம்

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (3)

இந்துார்: இந்துார் கிரிக்கெட் டெஸ்டில் அசத்திய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. முகமது ஷமி, அஷ்வின் உள்ளிட்ட பவுலர்கள் மிரட்ட, மூன்றே நாட்களில் வங்கதேசத்தின் கதையை முடித்தது.






இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இந்துாரில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 150 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 493 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா (60), உமேஷ் யாதவ் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. முந்தைய நாள் ஸ்கோருடன் இந்திய அணி முதல் இன்னிங்சை 'டிக்ளேர்' செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 343 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது.






ஷமி அபாரம்


வங்கதேச அணிக்கு இம்ருல் கெய்ஸ், ஷாத்மன் இஸ்லாம் ஜோடி துவக்கம் கொடுத்தது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா 'வேகத்தில்' மிரட்டினர். இம்ருல் கெய்சை (6), உமேஷ் யாதவ் போல்டாக்கினார்.
மறுபக்கம், இஷாந்த் சர்மா, ஷாத்மனை (6) போல்டாக்கினார். அடுத்து வந்த ஷமி, தன் பங்கிற்கு தொல்லை கொடுத்தார். முதலில் மோமினுல் ஹக்கை (7) அவுட்டாகிய இவர், அடுத்து முகமது மிதுனை (18) திருப்பி அனுப்பினார். தொடர்ந்து மிரட்டிய ஷமி, மகமதுல்லாவை (15) வீழ்த்தினார். லிட்டன் தாஸ் 35, மெகிதி 38 ரன் எடுக்க, முஷ்பிகுர் 64 ரன்னுக்கு அஷ்வினிடம் வீழ்ந்தார். கடைசியில் எபாதத் (1) அவுட்டாக, வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 213 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் வேகத்தில் மிரட்டிய முகமது ஷமி 4, சுழலில் அசத்திய அஷ்வின் 3 விக்கெட் சாய்த்தனர். டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 22ம் தேதி பகலிரவு போட்டியாக கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X