உள்ளாட்சி தேர்தலில் இலக்கு 80 சதவீதம்: மா.செ.,க்களுக்கு தி.மு.க., உத்தரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் இலக்கு 80 சதவீதம்: மா.செ.,க்களுக்கு தி.மு.க., உத்தரவு

Updated : நவ 17, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (15)
 உள்ளாட்சி தேர்தல், இலக்கு, 80 சதவீதம், மா.செ.,தி.மு.க., உத்தரவு

'எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் பெற்றது போல, 80 சதவீத இடங்களை, இந்த உள்ளாட்சி தேர்தலில் கைப்பற்ற வேண்டும்' என, சென்னையில் நடந்த, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தி.மு.க., மாவட்ட செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை, அறிவாலயத்தில், சமீபத்தில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில், மாவட்ட செயலர்கள் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு நடக்கிற தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுவதால், அதில் முறைகேடுகள் நடக்காமல், கட்சி முகவர்களால் கண்காணிக்க முடியும். ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய, நான்கு பதவிகளுக்கு, வெவ்வேறு வண்ணத்தில், ஓட்டுச்சீட்டு தரப்படும். அதை கவனித்து, ஓட்டளிக்க வேண்டும். அந்தந்த வண்ணத்துக்கான ஓட்டுப்பெட்டிகளில் உள்ள ஓட்டுக்களை, கட்சி முகவர்கள் முன்னிலையில் பிரிக்க மாட்டார்கள்.


வலியுறுத்தல்


கலெக்டர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் தான், அதற்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அந்த ஓட்டு எண்ணிக்கை எங்கே நடக்கிறது என்ற தகவல், எதிர்கட்சிகளுக்கு தெரியாமல், முறைகேடு செய்து, ஆளுங்கட்சியினர் வெற்றி பெற்றதாக, அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, சட்டசபை பொது தேர்தல் முடிந்த பின், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தான் நியாயமாக இருக்கும் என, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, அன்பரசன் ஆகியோர் மட்டும் வலியுறுத்தினர்.இவர்களை தவிர, மற்ற முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட செயலர்களும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக சந்திக்க வேண்டும் என்ற கருத்தையே வலியுறுத்தினர்.

கடந்த முறை, தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள் மனுத்தாக்கல் முடிந்து, வேட்புமனு பரிசீலனை நடத்துவதற்கு முன், நீதிமன்ற உத்தரவால், உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அப்போது, தி.மு.க., தேர்தலை நிறுத்தக் கோரி வழக்கு தொடுக்கவில்லை. 'சென்னை மாநகராட்சியில், வார்டு வரையறை பணிகள் முடிக்கப்பட வேண்டும்' என கோரி தான், வழக்கு தொடுக்கப்பட்டது.


எச்சரிக்கை

ஆனால், உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கு, தி.மு.க., காரணமாகி விட்டது என்ற, பொய் பிரசாரத்தை, ஆளுங்கட்சியினர் செய்தனர். இந்த முறை, தேர்தலை நிறுத்துவதற்கு, ஆளுங்கட்சி சார்பில், மறைமுகமாக, பொது நல வழக்கு போட வாய்ப்பு உள்ளது. அதேசமயம், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயமும், அரசுக்கு உள்ளது. எனவே, இந்த முறை, நாம் எச்சரிக்கையாக இருந்து, தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும், தேர்தலை நிறுத்துவதற்கான காரணங்களை முன்வைத்து, தி.மு.க.,வினர் யாரும் வழக்கு தொடுக்கக் கூடாது. ஐந்தாயிரம் முதல், 50 ஆயிரம் ஓட்டுகளுக்கான தேர்தலில், மின்னணு இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என, நீதிமன்றத்தில், நாம் தொடுத்த வழக்கில், 'தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளதே தவிர, உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. எனவே, மின்னணு இயந்திரம் பயன்பாட்டை ஏற்கவும் செய்யலாம்; ஏற்காமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, கடும் போராட்டத்துடன் தான், நாம் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில், வெற்றி வாய்ப்புகள் உள்ள சூழலை அறிந்து, கூட்டணி கட்சிகளுக்கு, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், இடஒதுக்கீடு அளிப்பது குறித்து, தி.மு.க., மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். மற்ற பதவி களுக்கு, குழு அமைத்து பேச்சு நடத்தலாம். எம்.ஜி.ஆர்., ஆட்சி யின் போது நடந்த உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., 80 சதவீதம் வெற்றி பெற்றது. அதேபோல, வரும் உள்ளாட்சி தேர்தலிலும், நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு, அவர்கள் பேசியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X