சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

தன்னம்பிக்கை மனுஷியாக மாற்றியது முயல்!

Updated : நவ 17, 2019 | Added : நவ 16, 2019
Share
Advertisement
தன்னம்பிக்கை மனுஷியாக மாற்றியது முயல்!

முயல் வளர்ப்பில் வருமானம் பார்த்து, தன் சொந்தக் காலில் நிற்கும், மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி சத்யா: பட்டப்படிப்பு படித்துள்ளேன். ஆசிரியை ஆக விருப்பம். பள்ளி ஒன்றில், சில காலம் பணியாற்றினேன்.
அப்பா திடீரென இறந்ததால், திருமணம் செய்து வைத்தனர். ஆசிரியர் வேலை பார்ப்பதாக கூறி, திருமணம் செய்த கணவர், ஏமாற்றி திருமணம் செய்தது பின்னர் தெரிய வந்தது.அதையும் சகித்துக் கொண்டு வாழ்ந்தேன். கொஞ்ச நாட்களிலேயே, வரதட்சணை கொடுமை துவங்கியது. பணம் வாங்கி வா என, என்னை அடிக்கடி, அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பார். எவ்வளவு கொடுத்தாலும், அவருக்கு போதாது.
ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு இதயத்தில் கோளாறு. அதை தெரிந்ததும், நிரந்தரமாக என்னை அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டார். கிடைத்த வேலைகளைப் பார்த்தேன். இதய ஆப்பரேஷனுக்கு பின், குழந்தைக்கு சரியானது.தற்செயலாக ஒரு பெரியவரைப் பார்த்தேன். 'ஐந்து குழந்தைகளை பெற்ற பிறகும், சோறு போட ஆளில்லை' என வருந்தினார்.
முயல் வளர்ப்பில், வருமானம் கிடைப்பதாகவும், அதை வைத்தே காலம் கழிப்பதாகவும் கூறினார். அவர் வழியை நானும் பின்பற்றினேன். முதலில், நான்கைந்து முயல்கள் வளர்த்தேன். தொழில் நுணுக்கங்கள் தெரிய வந்தன.அண்ணன் உதவியுடன், தனியாக இடம் பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக, முயல்கள் எண்ணிக்கையை அதிகரித்தேன். இப்போது, என்னிடம், 300 முயல்கள் உள்ளன.
ஒரு முயல், மாதத்திற்கு, அதிகபட்சம், 10 குட்டிகள் வரை போடும். அடுத்த, 30 நாட்களில் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடும்.விற்பனைக்கு பிரச்னையில்லை. திருச்சி, நாமக்கல், கரூர் வியாபாரிகள் வாங்கிக் கொள்கின்றனர். 1 கிலோ முயல், 300 - 400 ரூபாய்க்கு விற்கிறேன்.
வளர்ப்பு முயல், 600 - 800 ரூபாய். முயல் விற்பனையால், மாதம், 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. செலவு, 20 ஆயிரம் ரூபாய் தான். மீதி எல்லாம் லாபம்.முயல் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் தான், என்னை தன்னம்பிக்கை பெண்ணாக மாத்தியிருக்குது. என்னைப் போல கஷ்டப்படுவோருக்கு, என்னால் முடிந்த உதவிகள் செய்கிறேன். தெரிந்தவர்களுக்கு, முயல் பண்ணை வைத்துக் கொடுக்கிறேன். பலருக்கு, இந்த தொழில் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறேன்.
இந்த தொழில் செய்யலாம் என, விரும்பும் பெண்களுக்கு, என் பண்ணையிலேயே இலவசமாக பயிற்சி அளிக்கிறேன். என்னிடம் பயிற்சி எடுத்து, முயல் வளர்ப்போர், அவற்றை விற்க விரும்பினால், அதற்கான உதவியையும் செய்கிறேன்!
தொடர்புக்கு98432 55495

மரம் வளர்க்க மாணவர்களுக்கு கற்று கொடுக்கிறேன்!

மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், மதுரை - மேலுார் சாலையில் உள்ள, சிட்டம்பட்டி, அரசு நடுநிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் பெ.சிவராமன்:


இந்தப் பள்ளிக்கு ஆசிரியராக நான் வந்து, 13 ஆண்டுகள் ஆகின்றன. நான் இங்கு வந்த போது, இந்த பள்ளி வளாகத் தில், 10 மரங்கள் கூட இல்லை; இப்போது, 210 மரங்கள் உள்ளன.பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து, கிராமங்கள், நெடுஞ்சாலை ஓரங்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்துள்ளேன். ஆசிரியர் ஆவதற்கு முன்பிருந்தே, மரங்கள் மீது எனக்கு பற்று அதிகம்.பள்ளிக்கு காலையில் வந்தவுடன், மாணவர்களிடம், 'மரங் களுக்கு தண்ணீர் ஊற்றினீர்களா... நீங்கள் வளர்க்கும் செடி, எந்த அளவில் உள்ளது' என, கேட்பேன். மரங்கள் வளர்ப்பில் உள்ள பிரச்னைகள் குறித்து, மாணவர்களும் என்னிடம் மனம் திறந்து பேசுவர்.

மாணவர்களுக்கு கழிப்பறை கட்டுவதற்காக, பள்ளி வளாகத்தில் இருந்த பழைய கட்டடம் ஒன்று இடிக்கப்பட்டது. அதில் வளர்ந்திருந்த அரச மரச் செடியை, அப்படியே வேருடன் பிடுங்கி, வேறு இடத்தில் நட்டு வைத்தேன். இப்போது அது, பிரமாண்டமான மரமாக வளர்ந்து, ஏராளமான பறவைகளுக்கு சரணாலயமாக மாறிஉள்ளது.ஏட்டுக்கல்வியை மட்டும் கற்றுக் கொடுக்கும் இடமல்ல, பள்ளிக்கூடங்கள்; இயற்கைச் சூழலையும் கற்றுக் கொடுக்கும் இடமும் அது தான். மாணவர்களுக்கு சிறு வயதிலேயே, மரம் வளர்ப்பில் ஆர்வம் ஊட்டினால், எதிர்காலத்தில் அவர்களுக்கு அதில் விருப்பம் அதிகரிக்கும்; இயற்கை வனச் சூழல் மேம்படும்.அதனால், பள்ளி விடுமுறை நாட்களை, மாணவர்களுடன், மரங்கள் நடுவதில் தான் கழிக்கிறேன். மதுரையைச் சுற்றியுள்ள நாகமலை, சமணர் மலை போன்ற இயற்கைச் சூழல் நிறைந்த இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வேன்.பள்ளியில் படித்து முடித்து, உயர் நிலை படிப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு, மரக்கன்றுகளை பரிசாக வழங்குவது வழக்கம். தென்னை, மா, பலா, கொய்யா, சந்தனம், மருதம், கடம்பம் போன்ற மரக்கன்றுகளை கொடுத்து, அவர்களை வளர்க்கச் சொல்வேன். இதனால், அவர்களுக்கு இந்தப் பள்ளியில் படித்த நினைவுகள், ஒவ்வொரு முறை, அந்த மரங்களைப் பார்க்கும் போது வரும்.நேரம் கிடைக்கும் போது, மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று, அங்கு வளர்ந்து வரும் மரங்களை பார்த்து வருவேன். இவ்வாறு, மாணவர்களுக்கு, மரங்கள் மீதான நெருக்கத்தை அதிகரித்து வருகிறேன்.இந்தப் பூமி பந்திற்கு, பசுமைப் போர்வை போர்த்த வேண்டும்; அதை, மாணவர்கள் மூலம் செய்ய வேண்டும் என்பது தான் என் விருப்பம்!
தொடர்புக்கு: 99447 93606

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X