அயோத்தி கோவில் டிரஸ்டில் தமிழர்கள்?

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஒரு வழியாக, 134 ஆண்டுகளாக நீண்டு கொண்டிருந்த அயோத்தி வழக்கு முடிவிற்கு வந்துவிட்டது. ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மட்டும் இல்லையென்றால், இந்த வழக்கு முடிவிற்கே வந்திருக்காது என, சீனியர் வழக்கறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்.'அவர், எந்த ஒரு வழக்கையும் இழுத்துக் கொண்டே போக அனுமதிக்க மாட்டார்; யார் எதைச் சொன்னாலும், அதை கண்டு கொள்ளவே மாட்டார்' என, அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இன்று ஓய்வு பெறும் கோகோய், வரலாற்றில் இடம் பிடித்து விட்டார்.ராமர் கோவில் கட்ட, 'டிரஸ்ட்' அமைக்கும் படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம், தன் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது; இதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. வைஷ்ணவதேவி மற்றும் குஜராத்திலுள்ள சோம்நாத் கோவில்களை பராமரிக்க டிரஸ்ட் உள்ளது. அதே போல, ராமர் கோவிலுக்கும் டிரஸ்ட் அமையவிருக்கிறது.இந்த டிரஸ்டில், யாரையெல்லாம் நியமிக்கலாம் என்பதற்கு, மத்திய அரசு ஒரு பட்டியல் தயார் செய்து வருகிறது. இதில், அயோத்தி வழக்கில் வாதாடிய, முன்னாள் அட்டர்னி ஜெனரல் கேசவன் பராசரன் பெயர் உள்ளதாம். அயோத்தி வழக்கில், மத்தியஸ்தம் செய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இருந்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா. இவருடைய பெயரும் டிரஸ்ட் அங்கத்தினர் பட்டியலில் இருக்கிறதாம். இவர்களைத் தவிர, சன்னி வக்ப் போர்டைச் சேர்ந்தவர்களும் டிரஸ்டிகளாக இருப்பர். இதன் இறுதிப் பட்டியலை, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முடிவு செய்வர். சோம்நாத் கோவில் டிரஸ்டில், மோடியும், அமித் ஷாவும் உள்ளனர். அதே போல அயோத்தி கோவில் டிரஸ்டிலும், இந்த இருவரும் இருப்பர் என, பேச்சு அடிபடுகிறது.


மஹாராஷ்டிராவில் என்ன நடக்கிறது?


மஹாராஷ்டிராவில், பா.ஜ., வெற்றி பெற்ற பிறகும், அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. சிவசேனா, முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என, பிடிவாதம் பிடித்த காரணத்தால், 30 ஆண்டு கால கூட்டணி உடைந்து போனது.முதல்வர் பதவியை அடைந்தே தீர வேண்டும் என்பதற்காக, தாங்கள் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து, சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. மதவாத கட்சியான சிவசேனாவோடு, எப்படி கூட்டணி அமைப்பது என, காங்., தலைவர் சோனியா யோசித்தாலும், தோழமை கட்சித் தலைவர்கள், சிவசேனாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என, அவரை வற்புறுத்தினர். இப்போது, காங்கிரசும், தேசியவாத காங்கிரசும், துணை முதல்வர் பதவியோடு, முக்கிய அமைச்சர் பதவிகளையும் கேட்கின்றன. பா.ஜ., தலைவர் அமித் ஷா, மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியான பின், அந்த மாநிலத்திற்கு இதுவரை போகவே இல்லை. இந்த கூட்டணி அதிக நாள் நீடிக்காது; காங்கிரசுக்கும், தேசியவாத காங்கிரசுக்கும், அக்கட்சிகளின் முஸ்லிம் ஓட்டு வங்கி அடிபட்டு போகும் என, பா.ஜ., கணக்கு போடுகிறது. அதோடு, இக்கட்சிகளிடையே பிரச்னைகள் வெடித்து, கர்நாடகா மாதிரியே இங்கும் ஆட்சி, அதிக காலம் நீடிக்காது என, பா.ஜ., தலைவர்கள் சொல்கின்றனர்.சிவசேனாவின் முக்கிய எதிரி, பா,ஜ.,வின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ். 'இவர், சிவசேனாவை பல இடங்களில் ஒழித்துக் கட்டிவிட்டார்; எனவே, முதல்வர் பதவியில், அவர் மீண்டும் அமரக் கூடாது' என, உத்தவ் தாக்கரேவின் மனைவி, ராஷ்மி தாக்கரே கண்டிப்பு காட்டினாராம். இது தான், கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம் எனவும் சொல்லப்படுகிறது.


தி.மு.க., -- காங்., கூட்டணி நீடிக்குமா?

மஹாராஷ்டிராவில், சிவசேனா-, காங்கிரஸ்,- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறது. அதன் எதிரொலி, இப்போது தமிழகத்தில் கேட்க ஆரம்பித்திருக்கிறது. தி.மு.க.,வினர் பா.ஜ.,வை மதவாத கட்சி, காவி கட்சி என சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகின்றனர். ஆனால், மதவாத விஷயத்தில் சிவசேனா, பா.ஜ.,வை விட பல மடங்கு தீவிரமான கட்சி. இந்நிலையில், தங்களின் கூட்டாளியான காங்., சிவசேனாவுடன் கை கோர்த்திருப்பதை, தி.மு.க.,வினர் அதிர்ச்சியுடன் கவனிக்கின்றனர்.சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் சில, தி.மு.க., தலைவர்கள், இனி எந்த முகத்தோடு சிறுபான்மையினரிடம் ஓட்டு கேட்க முடியும் என, கேள்வி எழுப்புகின்றனர்.அதே நேரத்தில், இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என, ஒரு தரப்பினர் சமாளிக்கின்றனர். 'முரசொலி மாறன் இருந்த சமயத்தில், தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, சில எம்.பி.,க்கள் மத்திய அமைச்சர்களாகவும் இருந்தனர். 'எனவே, மஹா., கூட்டணி விவகாரம், தமிழக மக்களிடம் எடுபடாது' என, அவர்கள் சொல்கின்றனர்.என்றாலும், தமிழக பா.ஜ.,வினர், இந்த மஹாராஷ்டிரா கூட்டணியை முன்வைத்து, தமிழகத்தில், தி.மு.க., - காங்., கூட்டணிக்கு வெடி வைக்க தயாராகி வருகின்றனர்.


பார்லிமென்ட் அருங்காட்சியகமாகிறதா?


டில்லியில், ராஷ்டிரபதி பவனுக்கு அருகில் உள்ள, பார்லிமென்ட் வளாகமும், அதை ஒட்டி அமைந்துள்ள அரசு அலுவலகங்களும் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட உள்ளன. இதற்காக, குஜராத் நிறுவனம் ஒன்றுடன், மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.இந்நிலையில், இப்போதுள்ள பார்லிமென்ட் கட்டடத்தை இடிக்கக் கூடாது என, எதிர்க்கட்சியினர், தே.ஜ.கூ., அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இடிக்க மாட்டோம் என, மத்திய அரசும் சொல்லியிருக்கிறது.இது குறித்து, ஒரு சீனியர், பா.ஜ., தலைவரிடம் பேசிய போது, 'ராஷ்டிரபதி பவனுக்கு அருகில் உள்ள பிரதமர் அலுவலகம், நிதி மற்றும் உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக், பாதுகாப்பு அமைச்சகம் அமைந்துள்ள சவுத் பிளாக் ஆகிய கட்டடங்கள் முற்றிலுமாக மாற்றப்பட உள்ளன. 'இப்போதுள்ள பார்லிமென்ட் கட்டடத்தை இடிக்காமல், அது, அருங்காட்சியகமாக மாற்றப்படும். இங்கு பார்வையிட வரும் மக்கள், இந்திய வரலாற்றை பார்க்கலாம்' என்கிறார் அவர். அதே நேரத்தில், பார்லிமென்டிற்கு, புதிய கட்டடம் கட்டப்பட உள்ளதாம். 'பிரதமர் அலுவலகம் உட்பட முக்கிய அரசு அலுவலங்கங்கள், நவீன முறையில் கட்டப்பட உள்ளன. 'இதற்காக, ராஷ்டிரபதி பவனுக்கு அருகில், இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வரும், 2024ல், அடுத்த லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள், புதிய பார்லிமென்ட் காம்ப்ளக்ஸ் கட்டி முடிக்கப்படும்' என்கிறார் அந்த தலைவர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
01-டிச-201917:56:15 IST Report Abuse
karutthu அயோத்தி விவகாரத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சர்ய ஸ்வாமிகளின் பங்களிப்பு உள்ளதால் தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளை யோ அல்லது அவர் சொல்லும் ஒருவரை டிரஸ்ட் ல் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பது எங்களின் விருப்பம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X