விஞ்ஞான வளர்ச்சியால் மொபைல் போன், 'லேப்டாப்' உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில், அவற்றை உபயோகப்படுத்தி கழிக்கப்படும் 'இ-வேஸ்ட்' நம் நாட்டில் நாசம் விளைவிக்கும் நச்சாக மாறி வருகிறது.புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கடல் நீர்மட்டம் உயர்ந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, சமீபத்தில் ஐ.நா., சபை கவலை தெரிவித்தது. காடு அழிப்பு, நிலம், நீர், காற்று மாசுபாடு ஆகியன, புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாகின்றன.அதனால், சுற்றுச்சூழலை பாதிக்கும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. மறுபுறம் குவிந்து வரும் எலக்ட்ரானிக் கழிவுகளால் (இ-வேஸ்ட்) ஏற்பட்டு வரும் பாதிப்பு குறித்து, மக்கள் இன்னும் அறியாமல் இருக்கின்றனர்.மொபைல் போன், 'லேப்டாப்', ரெப்ரிஜிரேட்டர், 'டிவி' உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், பிளாஸ்டிக் தயாரிப்பு போல், நச்சுத்தன்மை உள்ள பொருட்கள் ஏராளமாக தயாரிக்கப்படுவதாக, 'இ-வேஸ்ட்' மறுசுழற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.உலகில் இ-வேஸ்ட் அதிகமுள்ள நாடுகளில், ஐந்தாம் இடத்தில் நம் நாடு உள்ளது. அதில், மகாராஷ்டிராவை அடுத்து இ-வேஸ்டில், தமிழகம் இரண்டாமிடத்தில் இருப்பது, அபாயத்தின் எதிரொலி.இதுகுறித்து, சுற்றுச்சூழல் பொறியியல் படிப்பு முடித்தவரும், 'இ-வேஸ்ட்' மறுசுழற்சியாளருமான பிரசாந்த் ஓமனகுட்டன் கூறியதாவது:எலக்ட்ரானிக் கழிவில், அமெரிக்கா, சீனா நாடுகளை தொடர்ந்து, நம் நாடு ஐந்தாம் இடத்தில் உள்ளது. உலகில் ஆண்டுதோறும், 5 கோடியே, 50 லட்சம் டன், 'இ-வேஸ்ட்' வெளியேற்றப்படும் நிலையில், 25 லட்சம் டன் இந்தியாவில் இருந்து உருவாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும், 3 லட்சம் டன் வெளியேறுகின்றன. எங்களை போன்ற நிறுவனங்களால், 30 ஆயிரம் டன்களே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. சென்னையை அடுத்து கோவை, திருச்சி, மதுரை நகரங்களில், 'இ-வேஸ்ட்' அதிகம். கோவையில், 3,000-4,000 டன் உருவாகிறது. அதில், 50-100 டன் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுகிறது. நச்சுத்தன்மை உள்ளவற்றை கும்மிடிப்பூண்டியில் உள்ள கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கு அனுப்புகிறோம். மீதமுள்ளவை ஆங்காங்கே கொட்டப்படுகிறது.'இ-வேஸ்ட்'களில் இருக்கும் காப்பர், அலுமினியம் உள்ளிட்ட உலோகங்கள் எரிக்கப்படும்போது, கண்ணுக்கு தெரியாத நச்சுக்களாக மாறி, காற்றில் கலந்து விடும். சுற்றுச்சூழல் பாதிப்புடன், மனிதர்களின் வாழ்நாளும் குறைகிறது. மாநிலம் முழுவதும் குறைந்த மறுசுழற்சியாளர்களே உள்ளதால், இவ்விஷயத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். குப்பைக்கு அபராதம் விதிப்பதுபோல், 'இ-வேஸ்ட்' விஷயத்திலும் சட்டங்களை அரசு கடுமையாக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். தொழில்நுட்பம் தேவைஎலக்ட்ரானிக் பொருட்களில் இருக்கும் மாங்கனீசு, துத்தநாகம் எரிக்கப்பட்டால், நச்சுப்பொருட்களாக காற்றில் கலப்பதுடன், அதன் சாம்பல் மழைநீரில் கலந்து நிலத்தடி நீரை பாதிக்கும். ஒரு டியூப் லைட்டில் இருக்கும் 'மெர்குரி', 20 ஆயிரம் லிட்டர் தண்ணீரை மாசுபடுத்தும் தன்மை உள்ளது. வெளிநாடுகளில் இவற்றை பிரித்தெடுத்து விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்துவதுபோல், இங்கும் அத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும்.