திருவனந்தபுரம்: நம் நாட்டில் புதுமணத் தம்பதியர் தேனிலவு செல்ல ஏற்ற இடங்களின் பட்டியலில் கேரள மாநிலம் முதலிடத்தைப் பிடித்து உள்ளது.
'டிராவல்ஸ் அண்டு லெசர்' என்ற அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்கள் தங்குவதற்கு வசதியான ஓட்டல்கள் ஆகியவை தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி இந்தாண்டு புதுமணத் தம்பதியர் தேனிலவுக்கு செல்ல ஏற்ற இடமாக கேரள மாநிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சமீபத்தில் டில்லியில் நடந்த விழாவில் கேரள மாநில சுற்றுலா துறை செயலர் மனோஜ் இதற்கான விருதை பெற்றார்.

இது குறித்து கேரள சுற்றுலா துறை அமைச்சர் கடகம்பள்ளி ராஜேந்திரன் கூறியதாவது: இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட மாநிலம் கேரளா. கடற்கரை ஆறு ஓடைகள் தொடர்ச்சியான மலைப் பிரதேசங்கள் ஆயுர்வேத சிகிச்சைக்கான இடங்கள் என சுற்றுலாவுக்கும் புதுமணத் தம்பதியருக்கும் ஏற்ற இடமாக கேரளா விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
