இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: இன்று (நவ.18) துவங்கிய பார்லி., குளிர்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இன்றைய கூட்டத்தொடர் துவங்கியதும், புதிததாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்கள் பதவியேற்றனர். தொடர்ந்து லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மாசுவராஜ், பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி , குருதாஸ் தஸ்குப்தா உள்ளிட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ராஜ்யசபா தலைவர் வெங்கையா அவரது புகழாரத்தில்;
ஜெட்லியின் பார்லி., பேச்சுகள் என்றும் மறக்க முடியாதவை. வழக்கறிஞராக பணியை துவக்கி மத்திய அமைச்சராக இந்த நாட்டிற்கு சேவைகள் புரிந்துள்ளார். கிரிக்கெட் சங்கத்திலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இந்த நாடு ஒரு சட்ட நிபுணரை இழந்து விட்டது. சட்டம், பொருளாதாரம் என பல துறைகளில் சிறந்து விளங்கியவர். இவரது நாட்டின் பங்களிப்பு மறக்க முடியாதது.

தொடர்ந்து லோக்சபாவில்; காஷ்மீர் சிறப்பு அந்தஸ் ரத்து விஷயத்தை காங்கிரஸ் எழுப்பியது. மஹாராஷ்டிராவில் விவசாயிகளுக்கான நிவாரணம் உயர்த்தி வழங்க வேண்டும் என சிவசேனா எம்பி.,க்கள் எழுப்பினர். காஷ்மீரில் எதிர்கட்சி தலைவர்கள் வீட்டுச்சிறையில் 108 நாட்களாக வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டும், இவர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என காங்., மற்றும் தேசிய மாநாட்டு கட்சி எம்பி.,க்கள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராஜ்யசபா மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.