வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், நடிகை காயத்ரி ரகுராம் இடையேயான மோதல் முற்றி வருகிறது. இதுதொடர்பாக நேரில் வந்து என்னை மிரட்டிப் பாருங்கள் என்று நேரடி சவால் விடுத்துள்ளார் காயத்ரி.
நிறைய அசிங்கமான பொம்மை இருந்தால் அது இந்து கோயில் என்று சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசி இருந்தார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் கருத்துக்கு இந்துக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ‛‛நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல, நான் கூறியதை திரித்து கூறி எனக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்'' என கூறியிருந்தார்.

இது தொடர்பாக நடிகையும், பா.ஜ.வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராமும், திருமாவளவனை டுவிட்டரில் விமர்சித்தார். குறிப்பாக திருமாவளவன் பேசிய சர்ச்சை வீடியோவை பதிவிட்டு, இந்த நபரை எங்கு கண்டாலும் இந்துக்கள் செருப்பால் அடிக்கணும் என்பது போல் இ-மோஜி பதிவிட்டார். அதோடு அவரின் விளக்கத்திற்கு, ‛‛நடிப்பு பத்தல'' எனவும் கூறியிருந்தார்.
இதனால் திருமாவளவன் ஆதரவாளர்கள், காயத்ரி ரகுராமை போனில் தொடர்பு கொண்டு கண்டிக்க தொடங்கினர். சிலர் அநாகரீக கருத்துக்களையும் கூறினர். இவை எல்லாவற்றுக்கும் அவரும் பதில் தந்ததோடு, இதை அனைத்தையும் டுவிட்டரில் நேரலையாக பதிவிட்டார்.

இதற்கிடையே காயத்ரியின் வீட்டை வி.சி.,யை சேர்ந்த ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர்.
‛‛திருமாவளவனால் என்னை நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை, எனவே, இந்துக்கள் அனைவரும் அவருக்கு சேலையை அனுப்பி வையுங்கள். இல்லை... இல்லை... மடிசார் புடவை அனுப்புங்கள்'' என டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதோடு திருமாவளவனுக்கு சவாலும் விடுத்துள்ளார்.

டுவிட்டரில் அவர், ‛‛நவ., 27ல் மெரினா கடற்கரைக்கு காலை 10 மணிக்கு நான் வருகிறேன். தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள். திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன். வெளிப்படையாகவே என்னை அவர் துன்புறுத்துகிறார்.
இதை நான் இப்படியே விடப்போவதில்லை. மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன். போலீசில் புகார் அளிப்பேன். பார்க்கலாம் இதுபோன்ற குண்டர்கள் எல்லாம் எவ்வளவு நாட்களுக்கு தான் எம்.பி.ஆக இருப்பார்கள்'' என காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE