புதுடில்லி :''மஹாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து சோனியாவுடன் பேச்சு நடத்தினேன். ஆனால், சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக எதுவும் பேசவில்லை,'' என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் கூறியதை அடுத்து, மஹாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.
மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டபை தேர்தலில், பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனாவுக்கும் சேர்த்து பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு ஒதுக்கும்படி, சிவசேனா பிடிவாதம் பிடித்ததால், இவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இதையடுத்து, பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறிய சிவசேனா, காங்., தேசியவாத காங்., கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயன்றது. அந்த முயற்சி பலிக்காததால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டது.இதற்கிடையே, காங்., தேசியவாத காங்., கட்சிகளின் தலைவர்களுடன், சிவசேனா நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தனர். இது தொடர்பாக, காங்., தலைவர் சோனியாவுடன் பேச்சு நடத்துவதற்காக, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், நேற்று டில்லி வந்தார். அப்போது, 'சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கப் போகிறீர்களா' என, செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, ''அப்படியா,'' என அவர், கிண்டலாக பதில் அளித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,''சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. எங்கள் கட்சி, காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்டது. யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ, அவர்கள் ஆட்சி அமைக்க வேண்டியது தான்,'' என்றார். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வீட்டுக்கு சென்ற சரத் பவார், அவருடன், 45 நிமிடம் ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்கு பின், சரத் பவார் கூறியதாவது:மஹாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து, சோனியாவிடம் விரிவாக பேச்சு நடத்தினேன். ஆனால், சிவசேனாவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக எந்த பேச்சும் நடத்தவில்லை. மஹாராஷ்டிரா அரசியல் நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகிறோம். இது தொடர்பாக, விரிவாக ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொடர்ந்து பேச்சு நடத்துவர். கூட்டணி கட்சிகளுக்கு இடையே, இன்னும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, வரும், 24ல், உத்தர பிரதேச மாநிலம், அயோத்திக்கு செல்ல திட்டமிட்டிருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தன் பயணத்தை, திடீரென ரத்து செய்துள்ளார். 'ஹிந்துத்வா கொள்கை உடைய சிவசேனாவுடன், காங்கிரஸ் இணைவது சரியாக இருக்குமா' என, காங்., தலைவர் சோனியா, சரத் பவாரிடம் கேள்வி எழுப்பியதாகவும், இதன் காரணமாகவே, இவர்கள் சந்திப்பு நடப்பதற்கு முன்பாகவே, தன் அயோத்தி பயணத்தை உத்தவ் தாக்கரே ரத்து செய்ததாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.
சரத் பவாரின் நழுவல் பேட்டி காரணமாக, மஹாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடித்து வந்தாலும், சோனியாவுடனான அவரது சந்திப்பில், பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இன்னும் சில நாட்களில், சிவசேனா தலைமையில், காங்., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேயர் பதவி வேண்டாம்
பா.ஜ., திடீர் முடிவு
நாட்டின் மிகவும் பணக்கார மாநகராட்சி என்ற பெருமை மும்பை மாநகராட்சிக்கு உள்ளது. இந்த மாநகராட்சியின் மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும், 22ல் நடக்கிறது. இதில் சிவசேனா சார்பில் போட்டியிட, அந்த கட்சியின் மூத்த தலைவர் கிஷோரி பண்டேகர், நேற்று மனு தாக்கல் செய்தார். ஆனால், பா.ஜ., சார்பில், யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இது குறித்து, பா.ஜ., தலைவர்கள் கூறுகையில்,'மும்பை மாநகராட்சியில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. அதனால், மேயர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஆனால், 2022ல் நடக்கும் தேர்தலில், எங்கள் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும். அப்போது வேட்பாளரை நிறுத்துவோம்' என்றனர். போட்டியிலிருந்து பா.ஜ., விலகியதால், சிவசேனாவுக்கு மேயர் பதவியை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE