அமளி துமளி: முதல் நாளே கொந்தளிப்புடன் துவங்கியது லோக்சபா| Dinamalar

அமளி துமளி: முதல் நாளே கொந்தளிப்புடன் துவங்கியது லோக்சபா

Updated : நவ 20, 2019 | Added : நவ 18, 2019 | கருத்துகள் (4)
Share
காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் பிரச்னை, பரூக் அப்துல்லாவின் வீட்டுக் காவல், ஐ.ஐ.டி., மாணவி தற்கொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை மையமாக வைத்து, எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள், அமளியில் இறங்கியதால், முதல் நாளே லோக்சபா அதிர்ந்தது.லோக்சபா, குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று, சபை கூடுவதற்கு முன்பே, சிவசேனா, எம்.பி.,க்கள், பார்லிமென்டின் முன்புறம் உள்ள, காந்தி சிலையை
 கொந்தளிப்பு, துவங்கிய, லோக்சபா,  அமளி துமளி!

காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் பிரச்னை, பரூக் அப்துல்லாவின் வீட்டுக் காவல், ஐ.ஐ.டி., மாணவி தற்கொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை மையமாக வைத்து, எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள், அமளியில் இறங்கியதால், முதல் நாளே லோக்சபா அதிர்ந்தது.

லோக்சபா, குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று, சபை கூடுவதற்கு முன்பே, சிவசேனா, எம்.பி.,க்கள், பார்லிமென்டின் முன்புறம் உள்ள, காந்தி சிலையை தவிர்த்துவிட்டு, சத்ரபதி சிவாஜி சிலை முன்பாக, ஆர்ப்பாட்டம் செய்தனர்.மஹாராஷ்டிரா விவசாயிகள் பிரச்னைக்காக குரல் கொடுத்துவிட்டு, உள்ளே வந்ததும், சபை துவங்கியது. புதிய எம்.பி.,க்கள், நான்கு பேர் பதவியேற்றுக் கொண்டவுடனேயே, அமளி துவங்கிவிட்டது.காங்கிரஸ், தி.மு.க., திரிணமுல், சமாஜ்வாதி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, கோஷங்கள் எழுப்பினர்.

'மூத்த எம்.பி.,யான பரூக் அப்துல்லாவை, வீட்டு காவலில் வைத்திருப்பது ஏன்' என, குரல் எழுப்பினர். இது குறித்து பேச, அனுமதி கேட்டும், சபாநாயகர் ஓம் பிர்லா, தரவில்லை.மாறாக, கேள்வி நேரத்தை நடத்திக் கொண்டு இருக்கவே, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஆவேசம் அடைந்தனர். உரத்த குரலில், கோஷங்கள் போட்டனர். ஒரு மணி நேரமாக கத்தியும் அனுமதி கிடைக்கவில்லை.


பரபரப்புதுணைக்கேள்வி வாய்ப்பு தரப்பட்டபோது, கோஷம் போட்டுக் கொண்டிருந்த, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் எம்.பி., பிரேமசந்திரன், தான் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல், தேசிய மாநாட்டு கட்சியின், எம்.பி., பரூக் அப்துல்லாவின் கைது பிரச்னையை கிளப்பவே, சபையில், பரபரப்பு கூடியது.இந்நிலையில், கேள்வி நேரம் முடிந்து, பூஜ்ய நேரம் துவங்கியதும், எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு தரப்பட்டது. அப்போது காங்கிரஸ் மூத்த, எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது:பரூக் அப்துல்லா கைதாகி, 108 நாட்கள் ஆகிவிட்டன. அவர், இன்னும் வீட்டுக் காவலில் உள்ளார்.இது, அநீதியானது. பரூக் அப்துல்லா, சிதம்பரம் ஆகியோருக்கு, அரசியல் சட்டம் வழங்கியபடி, சபை விவாதங்களில் பங்கேற்க, உரிமை உள்ளது.

வெளிநாட்டு எம்.பி.,க் களை, அழைத்துச் சென்று, காஷ்மீரை காட்டுகின்றனர்.ஆனால், சொந்த நாட்டு, எம்.பி.,க்கள், போக வேண்டுமென கேட்டும், மத்திய அரசு தடுக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. ஆனால், நோயாளி செத்துவிட்டார். இதுதான், காஷ்மீரின் நிலைமை.இவ்வாறு அவர் பேசினார்.


சட்டவிரோதம்


தி.மு.க., - எம்.பி., பாலு பேசுகையில், ''பரூக் அப்துல்லாவின் கைது, சட்டவிரோதமானது. அவர், இந்த சபையின் உறுப்பினர். விதிகளின்படி, எங்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, சபாநாயகராகிய உங்களுக்கு தான் உள்ளது. இதில் செயலாற்ற, நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்,'' என்றார்.அடுத்தடுத்து பேசிய, எம்.பி.,க்கள், காஷ்மீர் விவகாரம் குறித்து, விரிவாக பேசவே, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சிவசேனா எம்.பி.,க்களுக்கு, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதுபோல எதுவும் இல்லை. அக்கட்சி, எம்.பி.,க்கள், ஆளும்தரப்பு வரிசையிலேயே அமர்ந்திருந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


'உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மூடாதீர்கள்''ஊட்டியில் உள்ள, உருளைக்கிழங்கு விதை உற்பத்தி மற்றும் ஆய்வு மையத்தை, மூடும் முடிவை, கைவிட வேண்டும்' என, பார்லிமென்டில், கோரிக்கை வைக்கப்பட்டது.இது குறித்து, லோக்சபாவில், நீலகிரி எம்.பி., ராஜா பேசியதாவது:இந்திய வேளாண்மை ஆய்வு மையத்தின் கீழ், உருளைக்கிழங்கு விதை உற்பத்தி மற்றும் ஆய்வு மையம், நீலகிரி மாவட்டம், முத்தொரையில் செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்கள் அனைத்துக்கும், நோய் தாக்காத விதைகளை வினியோகிப்பதோடு, விவசாயிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கி வருகிறது.ஆனால், இந்த மையத்தை மூட, இந்திய வேளாண்மை ஆய்வு மையம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், தென் மாநிலங்களில், உருளை உற்பத்தி, பாதிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, தமிழகத்தின், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

இம்மையத்தை விட்டால், உருளை விதைகளுக்கு, பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் மட்டுமே ஆய்வு மையம் உள்ளது. இது, தென் மாநிலங்களில் இருந்து, வெகு தொலைவில் உள்ளது.மேலும், வட மாநிலங்களில் பயிரிடப்படும் விதைகள், தென் மாநிலங்களின் பருவ நிலைக்கு ஏற்ப வளர்வதில் சிக்கலும் உள்ளது. எனவே, ஊட்டியில் உள்ள உருளைக்கிழங்கு விதை ஆய்வு மையத்தை, மூடும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு, ராஜா பேசினார்.


பெயரை தவிர்த்த தி.மு.க.,சென்னை, ஐ.ஐ.டி., மாணவி தற்கொலை விவகாரத்தை, தமிழக - கேரள எம்.பி.,க்கள், பூஜ்ய நேரத்தில் கிளப்பினர். பிரேமசந்திரன் பேசுகையில், ''அந்த மாணவி, என் தொகுதியை சேர்ந்தவர். பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் மீது, குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மர்ம மரணம் குறித்து, உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என்றார்.பேராசிரியரின் பெயரை குறிப்பிடாமல் பேசிய கனிமொழி, ''பெற்றோர்கள், இறந்த மாணவியின் அறைக்கு சென்று பார்த்தபோது, அது, சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அங்கு, என்னதான் நடக்கிறது. குற்றவாளியை யார் காப்பாற்றுகின்றனர் என, தெரிய வேண்டும்,'' என்றார்.இறுதியாக பதிலளித்த, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''இதுகுறித்த விபரங்களை, மனிதவள மேம்பாட்டு அமைச்சக செயலர் கேட்டுள்ளார். விசாரணை துவங்கியுள்ளது. விசாரணையின் முடிவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


மாடத்தில் துரைமுருகன்


எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், பிரச்னைகளை வலியுறுத்தி, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டபடி, ஒரு மணி நேரம் அமளியில் ஈடுபட்டனர். இதில், தி.மு.க.,வின் ஒரு சில இளம், எம்.பி.,க் கள் மட்டுமே பங்கேற்றனர்; மூத்த, எம்.பி.,க்கள் தங்கள் இருக்கைகள் முன் நின்று கொண்டனர். தி.மு.க., மூத்த தலைவர் துரைமுருகன், தன் மகன் கதிர் ஆனந்த், எம்.பி.,யாக பதவியேற்பதை காண வந்து, மாடத்தில் அமர்ந்திருந்தார்.- நமது டில்லி நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X