புதுடில்லி: ''பார்லி.,யில் இரு சபைகளில் மையப் பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபடாமல், மக்களின் நம்பிக்கை மற்றும் இதயத்தை வெல்ல முடியும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.பார்லி.,யின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது.
உதாரணங்கள்
ராஜ்யசபாவின், 250வது கூட்டத் தொடரை முன்னிட்டு, ராஜ்யசபாவில், பிரதமர் மோடி பேசியதாவது:தேசிய வளர்ச்சியில், ராஜ்யசபாவின் பங்கு மிக முக்கியமானதாகும். 'ராஜ்ய சபா என்பது இரண்டாவது சபை தான்; ஆனால், இரண்டாம் நிலை சபை அல்ல' என, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். அதை நானும் வழிமொழிகிறேன்.நாட்டின் ஜனநாயக மரபை காப்பாற்றும் வகையில், இந்த சபையில் பல்வேறு மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.சமீபத்தில், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது உட்பட, பல உதாரணங்களை கூறலாம். நாட்டின் நலன் என்று வரும்போது, ராஜ்யசபா முந்திக் கொள்ளும். முத்தலாக் மசோதா நிறைவேறாது என, கூறினார்கள். ஆனால், ராஜ்யசபா அதை நிறைவேற்றியது.
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உட்பட, பல முக்கிய மசோதாக்களை விவாதித்து, நிறைவேற்றி தந்துள்ளது ராஜ்யசபா.இந்த சபைக்கு, மாநிலங்களின் அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதுவும் கூட்டாட்சி தத்துவத்துக்கு ஒரு சான்றாகும்.
போராடியதில்லை
அதே நேரத்தில், விவாதிப்பது, முடக்குவது ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை உணர்ந்து, இந்த சபை செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நேரத்தில், இரண்டு கட்சிகளை பாராட்ட விரும்புகிறேன். தேசியவாத காங்., மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிகள், சபையின் மையப் பகுதிக்குச் சென்று போராடியதில்லை. அதே நேரத்தில் தங்களுடைய வாதத்தை சரியான முறையில் எடுத்து வைப்பர். பா.ஜ., உட்பட அனைத்து கட்சிகளும் இதை கற்க வேண்டும்.சபையின் மையப் பகுதிக்குச் சென்று அமளி யில் ஈடுபடாமலேயே, மக்களின் நம்பிக்கையை, இதயத்தை வெல்லலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உதவியுள்ளதுமக்களால் தேர்ந்தெடுக்க முடியாத நிலையிலும், ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு, மக்கள் பணியில் ஈடுபடலாம் என்பதை, அம்பேத்கர் போன்றோர் நிரூபித்துள்ளனர். அவர் போன்ற மிகப் பெரும் தலைவர்களின் சேவையை இந்த நாடு பெறுவதற்கு, ராஜ்யசபா உதவியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
மாறிய சீருடை
ராஜ்யசபாவில் பணியாற்றும், 'மார்ஷல்' எனப்படும் சபை தலைவருக்கு உதவுவோருக்கான சீரூடை மாற்றப்பட்டுள்ளது. இதுவரை, இந்திய பாரம்பரியத்தை உணர்த்தும், வேட்டி, முழு நீள கோர்ட் மற்றும் தலைப்பாகை அணிந்திருந்தனர். தற்போது ராணுவத்தினர் போன்ற சீருடை மற்றும் தொப்பி வழங்கப்பட்டுள்ளது.ராஜ்யசபாவில் முந்தைய மற்றும் தற்போதைய, எம்.பி.,க்கள் மரணமடைந்தால், அவர்களுக்கான இரங்கல் தீர்மானத்தை, சபை தலைவர் மட்டுமே வாசிப்பார். முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராம் ஜெத்மலானி உள்ளிட்டோருக்கான இரங்கல் தீர்மானத்தில், பல்வேறு கட்சித் தலைவர்களும் பேச நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
'நெஞ்சை தொட்டு சொல்லுங்க'
ராஜ்யசபாவின், 250வது கூட்டத் தொடரையொட்டி, சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு பேசியதாவது:நாட்டின் வளர்ச்சிக்காக, சமூகப் பொருளாதார மாற்றங்களுக்காக, இந்த சபை நிறைய செய்துள்ளது. ஆனால், முழுமையாக செய்துள்ளோமா என, உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.இந்த நேரத்தில், நாம் அனைவரும் சுய பரிசோதனை செய்ய வேண்டும். இந்த சபையிலும், வெளியிலும் நாம் முழுமையாக விவாதித்துள்ளோமா, நம் பங்களிப்பை முழுமையாக அளித்துள்ளோமா என்று ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். நம்மால் இன்னும் நிறைய பங்களிப்பை அளிக்க முடியும்.இதற்காக, 10 ஆலோசனைகள் வழங்குகிறேன். அதிக அளவில் மசோதாக்கள், சட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளதால், சபை செயல்படும் காலத்தை அதிகரிக்க வேண்டும்.
மேலும் சபையில், நன்கு வாதிடக்கூடிய, எதிர்வாதம் வைக்கக் கூடியவர்களையே, எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்க வேண்டும் என, அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.டில்லியில் உள்ள காற்று மாசு குறித்து விவாதிக்க, நகர்ப்புற நிலைக் குழு அழைப்பு விடுத்தது. ஆனால், 29 எம்.பி.,க் களில், 25 பேர் மட்டுமே வந்தனர். இது, வேதனைஅளிக்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.