தகவல் ஆணையர் நியமனம்: ஸ்டாலின் பங்கேற்காதது ஏன் ?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தகவல் ஆணையர் நியமனம்: ஸ்டாலின் பங்கேற்காதது ஏன் ?

Updated : நவ 18, 2019 | Added : நவ 18, 2019 | கருத்துகள் (16)
தகவல் ஆணையர் நியமனம்: ஸ்டாலின் பங்கேற்காதது ஏன் ?

சென்னை: தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக, கவர்னரின் செயலராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபால் நியமிக்கப் பட்டுள்ளார்.

மாநில தலைமை தகவல் ஆணையராக இருந்த, ஷீலா பிரியா, மே மாதம் ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, புதிய தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்வதற்காக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சிங்காரவேலு தலைமையில், தேடுதல் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு பரிந்துரை செய்தவர்களில், தகுதியான நபரை தேர்வு செய்வதற்காக, தலைமைச் செயலகத்தில், நேற்று தேர்வுக்குழுக் கூட்டம் நடந்தது. முதல்வர் இ.பி.எஸ்., தலைமை வகித்தார். அமைச்சர் ஜெயகுமார், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் ஸ்வர்ணா ஆகியோர் பங்கேற்றனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.கூட்டத்தில், தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு, கவர்னரின் செயலர் ராஜகோபாலை தேர்வு செய்து, கவர்னருக்கு பரிந்துரை செய்தனர். கவர்னர் ஒப்புதலுடன், தலைமை தகவல் ஆணையராக, ராஜகோபால் நியமிக்கப்பட்டார்.

அவர், இந்த பதவியில் மூன்று ஆண்டுகள் இருப்பார். இவர், 2017 நவ., 28 முதல், கவர்னரின் செயலராக, பணியாற்றி வந்தார். அதற்கு முன் மத்திய அரசு பணியிலிருந்தார்.
இவர், தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப் பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு வீட்டு வசதி கழகம் மேலாண் இயக்குனர் விஷ்ணுபாட்டில், கவர்னரின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.
தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ராஜகோபால், தமிழகத்தை சேர்ந்தவர். 1984ல் ஐ.ஏ.ஏஸ்., தேர்ச்சி பெற்றார். இவரது மனைவி மீனாட்சியும், ஐ.ஏ.ஏஸ்., அதிகாரி. ராஜகோபால், கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி உள்ளார்.

ஸ்டாலின் பங்கேற்காதது ஏன் ?

தலைமை தகவல் ஆணையர் தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் ஸ்வர்ணாவிற்கு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதம்:
மாநில தகவல் ஆணையர் தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும்படி, தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. கடிதத்தில், தேடுதல் குழு அமைக்கப் பட்டதாகவும், அதன் பரிந்துரை, தேர்வுக்குழு கூட்டத்தில், ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால், தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு, விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை; அவர்களின் விபரங்கள் உட்பட, எந்த தகவலும், கடிதத்துடன்
இணைக்கப்படவில்லை.அதனால், பரிந்துரையை ஆழ்ந்து பரிசீலித்து, தேர்வுக்குழு உறுப்பினர் என்ற முறையில், என் கருத்துகளை தெரிவிக்கும் வாய்ப்பு, திட்டமிட்டு மறுக்கப்
பட்டுள்ளது. முன் கூட்டியே, மாநில தலைமை தேர்தல் தகவல் ஆணையர் யார் என்பதை முடிவு செய்துவிட்டு, பெயரளவிற்கு தேர்வுக்குழு கூட்டத்தை நடத்துவதாக, நான் கருதுகிறேன்.
அரசு நிர்வாகத்தில், வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டும் பதவியில் அமரும், மாநில தலைமை தகவல் ஆணையரை, தேர்வு செய்யும் இந்த நடைமுறை, எந்த விதத்திலும் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.

தமிழக அரசில் பரந்து விரிந்து கிடக்கும், ஊழல் தொடர்பான, முக்கிய விபரங்களை மூடி மறைக்கும் முயற்சியில், அரசு துவக்கத்திலேயே ஈடுபடுகிறது என்று எண்ணுகிறேன்.
ஆகவே, வெளிப்படைத்தன்மை துளியும் இல்லாத, தேர்வுக்குழு கூட்டத்தில், நான் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது.இவ்வாறு, கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X