திருமாவுக்கு நடிகை காயத்ரி சவால்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'திருமா'வுக்கு நடிகை காயத்ரி சவால்

Added : நவ 19, 2019
Share

சென்னை : திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்கனும் என்றும் தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள் என்றும் திருமாவளவன் குறித்து 'டுவிட்டரில்' கருத்து வெளியிட்ட நடிகை காயத்ரி ரகுராம் வீடு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியின் ராமஜென்ம பூமி குறித்து தீர்ப்பு அளித்தது. அதை விமர்சனம் செய்யும் விதமாக புதுச்சேரியில் நடந்த மகளிர் மாநாடு ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், 'குவி மாடமாக இருந்தால் மசூதி, கூம்பு போல இருந்தால் தேவாலயம், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் ஹிந்து கோவில்கள்' என கூறியிருந்தார்.அவர் மத கலவரத்தை துாண்ட முயற்சிக்கிறார் என தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராமும் திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன் 'டுவிட்டர்' பக்கத்தில்' ஹிந்துக்கள் அனைவரும் திருமாவளனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள்' என கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.புதுச்சேரியில் பேசியது தன்னியல்பாக நடந்தது. அதில் உள்நோக்கம் இல்லை என திருமாவளவன் தெரிவித்த போதிலும் அவரை அடிக்க வேண்டும் என கூறிய காயத்ரி ரகுராம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மர்ம நபர்கள் சிலர் அவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் அவரும் பதில் தந்ததோடு இவை அனைத்தையும் டுவிட்டரில் நேரலையாக பதிவிட்டார்.திருமாவளவனால் என்னை நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை எனவே இந்துக்கள் அனைவரும் அவருக்கு சேலையை அனுப்பி வையுங்கள். இல்லை... இல்லை... மடிசார் புடவை அனுப்புங்கள்'' என டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதோடு திருமாவளவனுக்கு சவாலும் விடுத்தார்.

டுவிட்டரில் அவர் நவ. 27ல் மெரினா கடற்கரைக்கு காலை 10:00 மணிக்கு நான் வருகிறேன். தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள். திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன். வெளிப்படையாகவே என்னை அவர் துன்புறுத்துகிறார்.இதை நான் இப்படியே விடப்போவதில்லை. மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன். போலீசில் புகார் அளிப்பேன்'' என காயத்ரி ரகுராம் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள நடிகை காயத்திரி ரகுராம் வீட்டை நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 15 பேர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பின் விடுவித்தனர்.தன் 'டுவிட்டர்' பதிவை காயத்ரி ரகுராமும் நீக்கிவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X