ஊரெங்கும் கஞ்சா வாசம்... கிரிமினல்களுடன் போலீஸ் 'சகவாசம்'

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019
Share
Advertisement
 ஊரெங்கும் கஞ்சா வாசம்... கிரிமினல்களுடன் போலீஸ் 'சகவாசம்'

சீக்கிரமாகவே இரவு வருவது, குளிர்கால துவக்கத்தை அறிவிக்கிறது. அப்படியொரு, மிதமான குளிர் நிலவும் மாலை வேளையில், மித்ரா வீட்டு முன் காத்திருந்தாள் சித்ரா.சொன்ன நேரத்தை தாண்டி, தாமதமாக வந்த அவளிடம், ''மித்து, சீக்கிரமாக போனாத்தான், மழைக்கு முன்னாடி வீட்டுக்கு வர முடியும்,'' என்றாள் சித்ரா.''சாரிங்க்கா... டிராபிக்கில் பஸ் சிக்கி லேட்டாயிடுச்சு. இதோ, அஞ்சே நிமிஷத்தில் ரெடியாயிடறேன்,'' என்றவாறு, வீட்டுக்குள் சென்றாள் மித்ரா.

அடுத்த சில நிமிடங்களில், இருவரும் வண்டியில், நல்லுாரிலுள்ள விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு புறப்பட்டனர்.''அக்கா... இன்னைக்கு என்ன விசேஷம். அந்த கோவிலுக்கு போலாமுன்னு சொல்றீங்களே?''''அட... கார்த்திகை மாதம் வந்ததால், இன்னைக்கு, 1,008 சங்காபிேஷக பூஜை நடக்குது. ரொம்ப விசேஷம். அதற்குத்தான், போறோம்,'' விளக்கினாள் சித்ரா.

''ஓ.கே.,ங்க்கா,'' என்ற மித்ரா, ரோட்டோரம் நின்றிருந்த மண் லோடு லாரியை பார்த்து, ''அக்கா... இந்த கிராவல் மண் கடத்தல் அதிகமாயிடுச்சாம்,'' சந்தேகம் கேட்டாள்.''உண்மைதான்டி. பல்லடம், தாராபுரம், காங்கயம் தாலுகாவில், பெர்மிஷன் இல்லாம, கிராவல் மண் எடுப்பது ரொம்ப ஜோரா நடக்குது. இதற்கு ரெவின்யூ டிபார்ட்மென்ட்டும் ரொம்ப சப்போர்ட்டாம். இதற்காக, மாசாமாசம், 'பரிகாரம்' தேடிக்கிறாங்களாம்,''

''மேலதிகாரிகளுக்கு தெரிஞ்சும், மண் கடத்தலை ஒண்ணும் பண்ண முடியலையா?. இப்படியே போனா, குடிமராமத்து பணிகளை செய்ய வேண்டியதில்லை. ஏகப்பட்ட குட்டை உருவாகிடும்,'' என, ஆதங்கப்பட்டாள் சித்ரா.''நீங்க சொல்றது சரிதான். மண் மேட்டரை தாண்டி, லாட்டரி விவகாரத்திலும், போலீசார் 'கப்...சிப்'தான்,''''அதான், ஊரறிஞ்ச விஷயமாச்சே...''''அதுசரிதாங்க. ஆனா, மக்களோட கோபத்தை பார்த்து, போலீசே அதிர்ச்சியாயிட் டாங்க,''

''ஆனா, அங்கேரிபாளையம், வெங்கமேடு ரோட்டிலும், அம்மா உணவகம் அருகிலும் ஒரு நெம்பர் லாட்டரி சக்கைப்போடு போடுதாம். இதை தெரிஞ்சுகிட்ட பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்,''

''உடனே, சுதாரித்து கொண்ட போலீசார், லாட்டரி கும்பலை விரட்டுவது போல் விரட்டியடித்தனர். மீண்டும் பழையபடி விக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்,''''அப்போ, 'மாமூல்' வாழ்க்கை ஆரம்பிச்சிடுச்சுன்னு சொல்லு மித்து,'' என்றவாறு சத்தமாக சிரித்தாள் சித்ரா.காங்கயம் ரோட்டில், நபார்டு நிதியில் மேற்கொள்ளப்படும், ரோடு பணி கிடப்பில் உள்ளதால், அதை பார்த்த மித்ரா, ''எப்பங்க்கா, இந்த ரோடு போட்டு முடிப்பாங்க,'' சலித்து கொண்டாள் மித்ரா.

''அட... இந்த மேட்டரில் நடக்கிற விஷயத்தை கேளு. நபார்டு நிதி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் நிதியில், மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு, ஊரக வளர்ச்சி பிரிவிலிருந்து அனுமதியும், பணிக்கான தொகைக்கு 'செக்'கும் கொடுக்கணும்,''''ஆனா, இதை வழங்க வேண்டிய ரெண்டு ஆபீசர்கள், இழுத்தடிக்கின்றனராம். 'எதையோ' எதிர்பார்த்து, 'செக்'தராமல் இருக்கின்றனர் என தெரிந்து கொண்ட, யூனியன் ஆபீசர்கள், கிடந்தால், கிடக்கட்டும்னு, விட்டுட்டாங்களாம். இதனால, வளர்ச்சிப்பணிதான் பாதிக்குது. கலெக்டர் தலையிட்டா பரவாயில்லைனு, எல்லா யூனியனிலும், இந்த பேச்சுதான் ஓடுதாம்,'' விளக்கினாள் சித்ரா.

''ஓ... அதுதான் விஷயமா? அக்கா... இதே மாதிரி, ஆபீசர்களை போலவே, சில செகரட்டரிகளும், நல்லாவே 'கல்லா' கட்டுறாங்களாம். மாவட்டத்தில், செல்வாக்கு மிகுந்த ஊராட்சிகளில், செகரட்டரிகள், அதிகாரிகளையே ஓவர்டேக் பண்ணிட்டாங்களாம்,''''குறிப்பா, சொல்லோணும்னா, கார்ப்ரேஷன் பார்டரில் இருக்கிற '......பாளைய' கிராம செகரட்டரி, கணக்கு வழக்கில்லாம, இஷ்டத்துக்கு சொத்து சேர்த்துட்டாராம். இது விஷயத்தில், ஆபீசர்களையே துாக்கி சாப்பிட்டுட்டாராம். இவ்ளோ தைரியமா இருக்கிற அவரு, அதிகாரிகளுக்கு, 'குரு' மாதிரி காட்சியளிக்கிறாராம்,''''எப்படி இவரு, வி.என்.டி.சி.,யில் சிக்காம இருக்காருன்னு தெரியலைன்னு, மத்த செகரட்டரிகள் ஓபனா பேசறாங்களாம்க்கா,''''அட... கொடுமையே,''என்ற சித்ரா, ''அதை விட கொடுமை ஒன்னு சொல்றேன் கேளு.

வெயிலில் நின்னு 'டிராபிக்' போலீஸ்காரங்க கஷ்டப்படறாங்கன்னுட்டு, சேவை அமைப்பினர், 75 விலை உயர்ந்த 'கூலிங் கிளாஸ்' கொடுத்தாங்களாம்,''''அதில, ஒரு பத்து பேருக்கு மட்டும் கொடுத்தாங்களாம். மீதி எங்கே போச்சுன்னு தெரியலைன்னு, விவரம் தெரிஞ்ச போலீஸ்காரங்க புலம்பறாங்களாம்,''''இதை தெரிஞ்சுகிட்ட சேவை அமைப்பினர், கஷ்டப்படறாங்கன்னு கொடுத்தா, இப்படி மொத்தமா சுருட்டுன்னா என்ன பண்றதுனு' புலம்பறாங்களாம்,''

''ஏங்க்கா... இந்த மாதிரி நடந்தா, உதவி செய்யணும்னு நினைக்கிறவங்க கூட, முன்வரமாட்டாங்க,'' என்று ஆதங்கப்பட்டாள் மித்ரா.''மித்து, உனக்கு விஷயம் தெரியுமா?'' என, அடுத்த மேட்டருக்கு தாவிய சித்ராவிடம், ''சொன்னாதாங்க்கா தெரியும்?'' என்றாள் மித்ரா.

''சொல்றேன் இருடி. பல்லடம் ரோட்டில், சந்தைபேட்டை பக்கத்துல இருந்து, ஸ்கூல், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்க்கு, ஒரு கும்பல் கஞ்சா பொட்டலங்களை சப்ளை பண்றாங்களாம். அப்புறமா, போதைக்கு அடிமையாகிற பசங்களை வச்சு, அடுத்தடுத்த காலேஜ்க்கும் சப்ளை பண்றாங்களாம்,''''இந்த விஷயத்திலாவது, போலீசார் கொஞ்சம் மனசாட்சியோட நடந்து, ஸ்டூடண்ஸோட எதிர்காலத்தை பாதுகாக்கணும்,'' என வேதனைப்பட்டாள்.''அக்கா..

நீங்க சொன்னதுதான் கொடுமையிலும் கொடுமையான விஷயம். போலீஸ் கண்டிப்பா ஆக்ஷன் எடுப்பாங்கன்னு நம்ப முடியல. இருந்தாலும், இருக்கிற ஓரிரு நல்ல ஆபீசர்கள் இருக்கிறதால, எதிர்பார்க்கலாம்,'' என்றாள் மித்ரா.அதற்குள் துாறல் மழை வரவே, இருவரும் அருகிலுள்ள கட்டடத்தில் நின்றனர். அப்போது, அங்கிருந்த பூக்கடையிலிருந்து மல்லிகை மணம் வீசியது.''மித்து, சிட்டியிலுள்ள சில முக்கியமான ஓட்டல்கள் மற்றும் '...மலை' நகரில் சில பகுதியிலும், போலீஸ் கண்ணுல, மண்ணை துாவிக்கிட்டு, விரும்பத்தகாத விஷயம் நடக்குதாம்.

நாளுக்கு நாள் இது அதிகரிக்கறதால, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தா நல்லாயிருக்கும்னு அந்தந்த பகுதி மக்கள் நினைக்கிறாங்க,''''ஆமாங்க... இந்த மாதிரி விஷயத்தை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கணும். ஆனா, இங்க என்னடான்னா, திருடனை விட்டுட்டு, அவனை அடிச்ச கடைக்காரரை அரெஸ்ட் செஞ்சு சாதனை படைக்கிறாங்க,'' என சிரித்தாள் மித்ரா.

''இது எங்கேடி நடந்தது?''''காளைக்கு பேர் போன ஊரில், சமீபத்தில் மளிகை கடையில், ஒருத்தர் திருடுறதை, 'சிசிடிவி'யில், கடைக்காரர் பார்த்துட்டார். ஆட்களை கூட்டிட்டு நேரா போய், திருடனை நல்லா கவனிச்சிருக்காங்க,''''இது தெரிஞ்ச போலீஸ் உடனே போய், திருடனை ஆஸ்பிட்டலில் சேர்த்திட்டு, கடைக்காரரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இத்தனைக்கும் அந்த திருடன் மேல, சிட்டியில் ஏகப்பட்ட கேஸ் இருக்குதாம்,''

''இதெல்லாம், போலீசுக்கு தெரியாதா? அவனை கொஞ்சிட்டு இருக்காங்க,'' என கோபப்பட்ட சித்ரா, ''... மலை' சப்-டிவிஷன், சட்டவிரோத செயல்களின் கூடாரமாக மாறிடுச்சாம்,''''என்ன சொல்றீங்க?'' ஆச்சரியப்பட்டாள் மித்ரா.

''உண்மைதான்டி. லாட்டரி, சரக்கு, சீட்டுன்னு, சகலவிதமான விஷயங்களும் தறிகட்டு ஓடிட்டு இருக்குது. இதுக்கு முன்னாடி ரொம்ப பிரச்னையா இருந்த நேரத்தில, பக்கத்தில இருக்கற ஈரோடு அதிகாரி தலைமையில் வந்த அதிகாரிங்க, 'செம ரெய்டு' நடத்தி, எல்லாத்தையும் மூட வச்சாங்க,''''இப்ப மறுபடியும், வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதையா, பழையபடி எல்லாம் தொடருதாம். இதுமட்டுமல்லாம, இன்னும் பல இடங்களில் 'கிளப்' ஆரம்பிங்கன்னு, போலீசே சொல்றாங்கன்னா பார்த்துக்கோடி,''

''இப்படி வேலியே பயிரை மேய்ந்தால், என்னக்கா பண்றது? எல்லாம் அந்த விஸ்வேஸ்வரருக்கே வெளிச்சம்,'' என மித்ரா, நல்லுார் கோவில் கோபுரத்தை நோக்கி கும்பிட்டாள். வண்டியை பார்க் செய்துவிட்டு, இருவரும், கோவிலுக்குள் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X