புதுடில்லி : தொழில் போட்டி மற்றும் நஷ்டங்களை சமாளிக்க, வரும் டிசம்பர் மாதம் மொபைல்போன் சேவை கட்டணங்களை உயர்த்த போவதாக ஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து, ஜியோ நிறுவனமும், மொபைல் போன் மற்றும் டேட்டா கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டில் மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., ஆகியவை வீழ்ச்சியே சந்தித்தது. இதனால், அந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியதால், இரு நிறுவனங்களையும் ஒன்றிணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏர்டெல், வோடோபோன் ஐடியா போன்ற தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் சந்தையில் சரிவை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜியோ நிறுவனம் அதிகமான வாடிக்கையாளர்களை கவர்ந்ததே இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது.

அதேநேரத்தில், ஜியோ வாடிக்கையாளர்கள், மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை அழைக்க நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வசூலித்து வருகிறது. மேலும், சில நாட்களுக்கு முன்னர், பல்வேறு தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் அளிக்க வேண்டிய நிலுவை லைசென்ஸ் கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும் 'ஸ்பெக்டரம்' பயன்பாட்டு கட்டணமான ரூ.41 ஆயிரம் கோடி என மொத்தமாக ரூ.1.33 லட்சம் கோடியை வசூலிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. செப்.,30 அன்றுடன் முடிந்த 2வது காலாண்டில், ஏர்டெல், வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்தன.
இந்நிலையில், தொழில்போட்டி மற்றும் நஷ்டங்களை சமாளிக்கும் வகையில், வரும் டிசம்பர் மாதம் முதல் மொபைல்போன் சேவை கட்டணங்களை அதிகரிக்க போவதாக ஐடியா மற்றும் வோடோபோன் ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உயர்தரமான சேவையை வழங்குவதற்காக கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்தன. எவ்வளவு கட்டண உயர்வு என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
பங்குகள் விலை அதிகரிப்பு
சேவை கட்டணம் அதிகரிக்கப்படும் என ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளதை தொடர்ந்து, பங்குச்சந்தைகளின் அதன் பங்குகளின் விலை அதிகரித்தன.
ஜியோ கட்டணமும் அதிகரிக்கிறது
ஏர்டெல், வோடோபோனை தொடர்ந்து, கட்டணத்தை அதிகரிக்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், '' மற்ற நிறுவனங்களை போலவே, நாங்கள் இந்திய நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் தொழிற்துறையை வலுப்படுத்த அரசுடன் இணைந்து செயல்படுவோம். மேலும் தரவு நுகர்வு அல்லது வளர்ச்சியை மோசமாக பாதிக்காத வகையில் அடுத்த சில வாரங்களில் கட்டணங்களை சரியான முறையில் அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்போம்'' எனக்கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE