ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, பெரும் இன்னல்களை சந்தித்த, தி.மு.க., சோனியாவின்பாதுகாப்புக்காக, கால் கடுக்க நின்று கோஷங்கள் போட்ட விநோதம், லோக்சபாவில் அரங்கேறியது.
காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பை, சமீபத்தில் மத்திய
அரசு விலக்கியது.இப்பிரச்னை குறித்து, லோக்சபாவில் விவாதிக்க கோரி அக்கட்சி சார்பில், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டிருந்தது.சபை துவங்கியதும், சபாநாயகர் கேள்வி நேரத்தை ஆரம்பிக்க, காங்கிரஸ், எம்.பி.,க்கள் அமளியை ஆரம்பித்தனர். தங்கள் நோட்டீசுக்கு என்ன பதில் எனக் கேட்டு, கோஷங்கள் எழுப்பினர். இவர்களோடு சேர்ந்து, தி.மு.க., -- எம்.பி.,க்களும் குரல் எழுப்பினர்.
பூஜ்ய நேரம்
அமளியை கண்டுகொள்ளாமல், சபாநாயகர்,கேள்வி நேரத்தை தொடர்ந்து நடத்தியபடி இருந்தார். அப்போது, காங்கிரஸ், தி.மு.க., - எம்.பி.,க்கள், சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் இறங்கியதால் பரபரப்பு கூடியது. ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, இந்த அமளி நீடித்தாலும், சபாநாயகர் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. கோஷங்கள் போட்ட, எம்.பி.,க்களே சோர்ந்து போன நிலையில், பூஜ்ய நேரம்துவங்கியது.
அப்போது, பகுஜன் சமாஜ், எம்.பி., டேனிஷ் அலி, தான் பேச அனுமதி கேட்டிருந்த விஷயத்தை விட்டுவிட்டு, டில்லி, ஜே.என்.யு., மாணவர்கள் விவகாரத்தை பேச ஆரம்பிக்கவே, கோபமான சபாநாயகர், காங்கிரஸ், எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை பேச அழைத்தார். அப்போது அவர், ''முன்னாள் பிரதமர் இந்திராவின் படுகொலைக்குப் பிறகு, அக்குடும்பத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு இது. அதை எப்படி இந்த அரசு நீக்கலாம்,'' என, கேள்வி எழுப்பினார்.
இந்த விஷயம் குறித்து, பலரும் பேசிக் கொண்டே இருக்க, தனக்கும் பேச வாய்ப்பு தரும்படி, தி.மு.க., பார்லி., குழு தலைவர், டி.ஆர்.பாலு திரும்ப திரும்ப கேட்டபடி இருந்தார். அவருக்கும் சபாநாயகர் அனுமதி வழங்கவே, ஆவேசத்துடன் பேசிய பாலு, ''பிரச்னையின் தன்மையை அறிவோடு நோக்க வேண்டும். அந்த வகையில், அந்த குடும்பத்தினரின் உயிருக்குஅச்சுறுத்தல் உள்ளது.'
'சோனியா இந்திய நாட்டின் குடிமகள். அவருக்கு, எஸ்.பி.ஜி., கமாண்டோ பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதை நீக்கி, மீண்டும் வழங்க வேண்டும்,'' என்றார்.மேலும், ''எங்களது கோரிக்கையை அலட்சியம் செய்யும் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்'' என, அவர் கூறவே, தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும், சபையை விட்டுவெளியேறினர்.
ராஜிவ் படுகொலை விவகாரத்தில் வேறெந்த கட்சியை விடவும், தி.மு.க., தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளானது. கொலை சம்பவம் நிகழ்ந்தவுடன், தி.மு.க.,வினரின் வீடுகள் தாக்கப்பட்டு, சொத்துக்கள் சூறையாடப்பட்டன.ராஜிவ் கொலை குறித்து விசாரித்த ஜெயின் கமிஷனிலும், தி.மு.க., பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அந்த அறிக்கை வெளியான சமயத்தில், மத்தியில், ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்தது.
வரலாற்று விநோதம்
அதில் அங்கம் வகித்த, தி.மு.க., அமைச்சர்கள் ராஜினாமா செய்தாக வேண்டும் என, அந்த ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்த காங்கிரஸ் நெருக்கடி தந்த வரலாறும் உண்டு.
இப்படி காங்கிரசிடம் சிக்கி தவித்த, தி.மு.க., அதே ராஜிவின் மனைவியும், காங்கிரஸ் தலைவருமான சோனியாவுக்கு பாதுகாப்பை தர வேண்டு மென கேட்டு, லோக்சபாவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கால் கடுக்க நின்று கோஷங்கள் போட்டு,வெளிநடப்பும் செய்தது வரலாற்று விநோதம் தான். அதே நேரத்தில், காங்கிரசிலிருந்து பிறந்த திரிணமுல் காங்கிரஸ், இவ்விஷயத்தை கண்டுகொள்ளவே இல்லை.இன்னொரு கட்சியான தேசியவாத காங்கிரஸ் எம்.பி.,க்களும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோனியா குடும்ப பாதுகாப்பு; மாநிலங்களுக்கு கடிதம்
காங்., தலைவர் சோனியா, அவருடைய மகனும் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல், மகளும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா ஆகியோருக்கான, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இது விலக்கி கொள்ளப்பட்டு, சி.ஆர்.பி.எப்., வசம் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டது. அதே நேரத்தில், 'இசட் பிளஸ்' பிரிவின் கீழ் இவர்களுக்கானபாதுகாப்பு தொடர்கிறது.இவர்களைத் தவிர, காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவருடைய மனைவி குருசரண் சிங் கவுர் ஆகியோருக்கான, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டு, சி.ஆர்.பி.எப்.,பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப்படி, 57 வி.ஐ.பி.,க்களுக்கு, சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு அளிக்கிறது. பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ரிலையன்ஸ்குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, அவருடைய மனைவி நீட்டா அம்பானி ஆகியோருக்கும்,இந்தப் படைப் பிரிவு பாதுகாப்பு அளிக்கிறது.இந்தப் பாதுகாப்பு பிரிவில் தற்போது, 4,000 கமாண்டோக்கள் உள்ளனர். பாதுகாப்பு அளிக்க வேண்டிய, வி.ஐ.பி.,க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மேலும், 2,000 கமாண்டோக்களை படையில் சேர்ப்பதற்கு அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு, சி.ஆர்.பி.எப்., கடிதம் அனுப்பி உள்ளது.
'தலித் தீவிரவாதி' என்பதா? பொங்கிய தி.மு.க., - எம்.பி
பூஜ்ய நேரத்தில் பேசிய தர்மபுரி, எம்.பி., செந்தில்குமார், ''தமிழகத்தில், சமூக புரட்சிக்கு வித்திட்ட பெரியார் குறித்து, பாபா ராம்தேவ், அவதுாறு கருத்துகளை கூறுவதை ஏற்க முடியாது. பெரியாரை, 'தலித் தீவிரவாதி' என, ராம்தேவ் கூறியது கண்டனத்திற்குரியது. சமூக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை விரும்பும் மக்களிடையே, இதுபோன்ற பிளவுபடுத்தும் பேச்சுக்களை, அரசு அனுமதிக்க கூடாது'' என்றார்.
தமிழக எம்.பி.,க்கள் ஹிந்தியில் கோஷம்
கேள்வி நேரத்தின் போது, எம்.பி.க்கள் பலரும் மாறி மாறி கோஷங்கள் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, காங்கிரஸ், எம்.பி.,க்களான விஷ்ணுபிரசாத்தும், ஜோதிமணியும், 'பதில் கூறுங்கள் பிரதமரே, பதில் கூறுங்கள்' என்ற அர்த்தத்தில், 'ஜவாப் தோ, ஜவாப் தோ, பிரதான் மந்த்ரி ஜவாப் தோ' என, ஹிந்தியில் கோஷங்கள் போட்டு அசத்தினர்.கடந்த கூட்டத்தொடரில், அ.தி.மு.க., -எம்.பி., ரவீந்திரநாத், ஹிந்தி, சமஸ்கிருத வார்த்தைகளை கூறி, அசத்திய நிலையில், தற்போது, ஹிந்தியில் கோஷம் போட்டு அமளி செய்த தமிழக, எம்.பி.,.க்கள் என்ற பெருமையை, இந்த இரு எம்.பி.,க்களும் பெறுகின்றனர்.
- நமது டில்லி நிருபர் -