புதுடில்லி: மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், மாறுபட்ட கருத்துகள் கூறியுள்ள நிலையில், ''அவர் பேசுவதை புரிந்துக் கொள்ள, 100 பிறவிகள் எடுக்க வேண்டும்,'' என, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன.மொத்தமுள்ள, 288 தொகுதிகளில், இந்தக் கூட்டணி, 161 இடங்களில் வென்றன. சுழற்சி முறையில் முதல்வர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை சிவசேனா முன்வைத்ததால், கூட்டணி பிளவுபட்டது.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்., மற்றும் காங்.,ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயன்று வருகிறது.நேற்று முன்தினம் காங்., தலைவர் சோனியாவை, சரத் பவார்சந்தித்தார். சந்திப்புக்கு முன் அளித்த பேட்டியில், 'விரைவில் கூட்டணி அரசு அமையும்' என, சரத் பவார் கூறினார். ஆனால், சந்திப்புக்கு பிறகு அளித்த பேட்டியில், 'கூட்டணி அரசு அமைப்பது குறித்து எதுவும் பேசவில்லை' என்று கூறினார்.
தேசியவாத காங்., ஆதர வுடன் ஆட்சி அமைப்போம் என, சிவசேனா கூறுகிறதே என்ற கேள்விக்கு, 'உண்மையாகவா' என்று பதில் கேள்வி எழுப்பினார்.அதனால், சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கூட்டணி அரசு அமைவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் கூறியதாவது: சரத் பவார் பேசுவதை புரிந்துக் கொள்ள, நான், 100 பிறவிகள் எடுக்க வேண்டும். பவார் பற்றியோ, கூட்டணி பற்றியோ நீங்கள் கவலைப்பட வேண்டாம். வெகு விரைவில், சிவசேனா தலைமையிலான நிலையான அரசு மஹாராஷ்டிராவில் அமையும். கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக சிவசேனா பேசி வருகிறது. ஆனால், ஊடகங்கள் தான், குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
சரத் பவார் கட்சி குறித்து, பார்லி.,யில் பிரதமர்மோடி பாராட்டியதில் என்ன தவறு இருக்கிறது. ஏற்கனவே பவாரை தன் அரசியல் குரு என்று மோடி கூறியுள்ளார். இதில்அரசியல் எதுவும் இல்லை. மஹாராஷ்டிராவில் தன் நீண்டகால மற்றும் மிகப் பெரிய கூட்டணி கட்சியை, பா.ஜ., இழந்துள்ளது. மாநிலத்தில், பா.ஜ.,வுக்கு எப்போதும் ஆதரவு அளித்து, தேர்தலில் அதிக இடங்கள் கொடுத்து ஆதரித்தோம். ஆனால், பார்லி.,யில் தற்போது சிவசேனாவுக்கான இடத்தை மாற்றியுள்ளனர். இதற்கு, அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில்கூட, பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. பா.ஜ., தலைவர் அமித் ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நேரில்சந்தித்து பேசியதால் தான் இந்தக் கூட்டணிஉருவானது. இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக, 'எங்களுடைய கோரிக்கையை ஏற்று, 50 : 50 விகிதாசாரத்தில் அமைச்சரவையில் இடம் அளிக்கத் தயாராக இருந்தால், கூட்டணி அரசு அமைப்பது குறித்து, பா.ஜ.,வுடன் மீண்டும் பேச்சு நடத்த தயாராக உள்ளோம்' என, சிவசேனா மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
22ல் ஆலோசனை
மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பான குழப்பம் நீடித்து வரும் நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, சிவசேனா, 22ல் ஆலோசனை நடத்த உள்ளது.'சிவசேனா, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, அனைவருடனும் ஆலோசனை நடத்த உள்ளார்' என, கட்சி மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.