எதிர்க்கட்சி எம்.பி.,,க்கள் எதிர்ப்பு: மாறுகிறது, மார்ஷல் சீருடை| Dinamalar

எதிர்க்கட்சி எம்.பி.,,க்கள் எதிர்ப்பு: மாறுகிறது, 'மார்ஷல்' சீருடை

Updated : நவ 21, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (4)
எதிர்க்கட்சி,எதிர்ப்பு,மாறுகிறது, மார்ஷல், சீருடை

புதுடில்லி: ராஜ்யசபாவில், 'மார்ஷல்'களுக்கான சீருடை, ராணுவ சீருடை போல மாற்றப்பட்டதற்கு, எதிர்க்கட்சி, எம்.பி.,க்களும், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 'சீருடைய மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபாவில் பணியாற்றும், 'மார்ஷல்' எனப்படும், சபை காவலர்களுக்கான சீரூடை மாற்றப்பட்டுள்ளது. இதுவரை, மார்ஷல்கள், முழு நீள கோர்ட் மற்றும் தலைப்பாகை அணிந்திருந்தனர். தற்போது ராணுவத்தினர் போன்ற சீருடை மற்றும் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, ராஜ்யசபாவில் நேற்று கடும் எதிர்ப்பு எழுந்தது.

காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், ''சீருடையை ஏன் மாற்றினீர்கள்... ஒருவேளை, ராஜ்யசபாவில் ராணுவ சட்டம் அமலுக்கு வந்து விட்டதா,'' என, கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த, சபை தலைவர் வெங்கையா நாயுடு, ''முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில், முக்கியத்துவம் இல்லாத கேள்விகளை கேட்காதீர்கள்,'' என்றார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மற்ற எம்.பி.,க்களும், சீருடை மாற்றத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இது குறித்து வெங்கையா நாயுடு கூறியதாவது:சீருடை மாற்றப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். வேறு சில தரப்பிலிருந்தும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மார்ஷல்களில் சீருடையை மீண்டும் மாற்றுவது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கும்படி, ராஜ்யசபா செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும், சீருடை மாற்றத்துக்கு, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X