புதுடில்லி: மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, காங்.,கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஜாமின் மனு மீதான உத்தரவில் தவறு நடந்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து, டில்லி உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
காங்.,கைச் சேர்ந்த, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், இந்தத் தீர்ப்பின் ஒரு பாராவில் தவறு இருப்பதாகவும், அதை திருத்த வேண்டும் என்றும், அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது.

இதை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கைட் கூறியதாவது:'சிதம்பரம் ஜாமின் மனு மீதான உத்தரவின், 40வது பாராவில் கூறப்பட்டுள்ள கருத்துகள், அமலாக்கத் துறையின் கருத்தின் அடிப்படையில் கூறப்பட்டதாக சந்தேகம் எழலாம்' என, அமலாக்கத் துறை கூறியுள்ளது.அந்த பாராவில் எந்த இடத்திலும், சிதம்பரத்தின் பெயர் குறிப்பிடப்பிடவில்லை. ரோஹித் டாண்டன் என்ற வழக்கறிஞர் மீதான பண மோசடி வழக்கில் கூறப்பட்டவை அந்தக் கருத்து. அதை மேற்கோள் காட்டிட நினைத்தோம். ஆனால், அதைக் குறிப்பிடவில்லை.
இது தவறு இல்லை. இருப்பினும், சர்ச்சை ஏற்படாமல் இருக்க, இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது. ஜாமின் மனு மீதான உத்தரவின், 40வது பாராவை, ரோஹித் டாண்டன் வழக்கில் கூறப்பட்டவை என திருத்தப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.