சென்னை: மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை, மறைமுக தேர்தல் வழியாக நிரப்புவது குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம், ஏற்பாடுகள் செய்து வருகிறது. ஆனால், ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான தி.மு.க.,வும், உள்ளாட்சி தேர்தலை விரும்பவில்லை.
நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசின் நெருக்கடி காரணமாக, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய நிலைக்கு, அ.தி.மு.க., அரசு தள்ளப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டப்படி, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை, வாக்காளர்கள் ஓட்டளித்து, நேரடியாக தேர்வு செய்ய வேண்டும்.
எனவே, அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள, பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், தங்களுக்கு மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை ஒதுக்கும்படி வலியுறுத்தி வருகின்றன. இதையும், அ.தி.மு.க., தலைமை விரும்பவில்லை. அதே நிலை தான், தி.மு.க., கூட்டணியிலும் நிலவுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு, மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை, தாரை வார்த்து கொடுத்தால், கட்சியினரை சமாளிக்க முடியாது.
மேலும், தலைவர் பதவிகளை கொடுப்பது, அக்கட்சிகளை வளர்த்து விடுவதற்கு வழிவகுக்கும்.
இதை தவிர்க்க, மேயர் மற்றும் தலைவர் பதவிகளை, வார்டு உறுப்பினர்களே தேர்வு செய்யும், மறைமுக தேர்தலை அமல்படுத்த, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆலோசித்து முடிவு செய்வதற்காக, தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது.
முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலர் சண்முகம், முதல்வரின் செயலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்த நிதி ஒதுக்குவது; மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் தலைவர் பதவிக்கு, மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து, விவாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சென்னை அண்ணா பல்கலையை, மேம்படுத்தப்பட்ட சீர்மிகு பல்கலையாக, மத்திய அரசு உதவியுடன் தரம் உயர்த்த அனுமதி அளிப்பது; ஐந்து புதிய நிறுவனங்கள் தொழில் துவங்க அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஆனால், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அதிகாரப்பூர்வமாக, எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு, மறைமுக தேர்தல் நடத்த, முடிவு செய்தால், அவசர சட்டம் கொண்டு வரப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE