சென்னை: சர்க்கரை கார்டுதாரர்களின் கோரிக்கைகள் அதிகமானதால், மனம் மாறிய அரசு, இலவச ரேஷன் அரிசி பெறும் வகையில், சர்க்கரை கார்டை, அரிசி கார்டாக மாற்றி கொள்ளலாம் என, அறிவித்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை உள்ளிட்டவை, மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. இவற்றை வாங்க, ரேஷன் கார்டுகள் அவசியம். அதன்படி, மக்கள் விருப்பத்தில், முன்னுரிமை அரிசி, முன்னுரிமையற்ற அரிசி, முன்னுரிமையற்ற சர்க்கரை, எந்த பொருளும் வாங்காதது என்ற பிரிவுகளில், ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
வசதியானவர்கள்
அரிசி கார்டுகளுக்கு, அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும்; சர்க்கரை கார்டுகளுக்கு, அரிசி தவிர்த்த மற்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன. சர்க்கரை கார்டுதாரர்களில் பலர், அரசு ஊழியர்கள்; வசதியானவர்கள். பொங்கல் பரிசு தொகுப்பு, அரசின் இலவச திட்டங்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவதில், அரிசி கார்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால், சர்க்கரை கார்டுதாரர்களும், தங்களின் கார்டை, அரிசி கார்டாக மாற்றி தரும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விரைவில், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதனால், சர்க்கரை கார்டுதாரர்களின் குடும்ப ஓட்டுகளை கவரும் வகையில், 'சர்க்கரை கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்றி கொள்ளலாம்' என, அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, உணவு துறை அமைச்சர் காமராஜ், நேற்று வெளியிட்ட அறிக்கை:பொது வினியோக திட்டத்தில், தற்போது, 10.19 லட்சம் சர்க்கரை கார்டுகள் உள்ளன. அவற்றை வைத்திருப்போரில், பெரும்பாலானோர், அரிசி பெறக்கூடிய கார்டாக மாற்றம் செய்து தர, கோரிக்கை விடுத்து உள்ளனர்.அதற்கு, முதல்வர் அனுமதி அளித்துள்ளார். அதன்படி, சர்க்கரை கார்டு தாரர்கள், தகுதியின் அடிப்படையில், அரிசி கார்டாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கு விண்ணப்பிக்கலாம்.
சமர்ப்பிக்கலாம்
அதற்கான விண்ணப்பங்களை, தங்கள் ரேஷன் கார்டு நகலை இணைத்து, இன்று முதல் வரும், 26ம் தேதி வரை, 'www.tnpds.gov.in' என்ற இணையதள முகவரியிலும்; சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம்.அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, சர்க்கரை கார்டுகள், தகுதி அடிப்படையில், அரிசி கார்டுகளாக மாறுதல் செய்ய, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
எந்த பொருளும் வாங்காதவர்!
வசதியானவர்கள், அரசு ஊழியர்கள், எந்த பொருளும் வாங்காத கார்டுகளை வாங்கி, அதை, முகவரி சான்றுக்கு பயன்படுத்தி வருகின்றனர். நடப்பாண்டு பொங்கலுக்கு, அனைத்து கார்டுகளுக்கும், 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை, தமிழக அரசு அறிவித்தது. வசதியானவர்களுக்கு பணம் வழங்குவதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், எந்த பொருளும் வாங்காத கார்டுதாரர்கள் தவிர, மற்ற அனைவருக்கும் பணம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, 'வசதியாக இருக்கும் போது, அந்த கார்டை வாங்கினோம்; தற்போது, பொருளாதாரம் சரியில்லாததால், அரிசி கார்டாக மாற்ற வேண்டும்' என, அவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்; அதை, அரசு ஏற்கவில்லை. தற்போது, சர்க்கரை கார்டுகளுக்கு அறிவித்தது போல, எந்த பொருளும் வாங்காத, 46 ஆயிரம் கார்டுதாரர்களையும், அரிசி கார்டாக மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE