புதுச்சேரி: ''கவர்னர் கிரண்பேடி, சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கச்சி போல், அடக்குமுறைகளை கையாள்கிறார்,'' என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசினார்.
புதுச்சேரி காங்., அலுவலகத்தில் நடந்த, முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் விழாவில், முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:கவர்னர் கிரண்பேடி, மக்கள் நலத் திட்டங்களை தடுத்து நிறுத்தி வருகிறார். தீபாவளி போனஸ், அரசு ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட, 39 கோப்புகளை கவர்னருக்கு அனுப்பி வைத்தேன். 10 கோடி ரூபாய் வரையிலான நிதி செலவிற்கு முதல்வர், அமைச்சர்களுக்கு அதிகாரம் உள்ளது.
அதனால், அந்த கோப்புகள் எதையும், அவருக்கு அனுப்பத் தேவையில்லை. ஆனால், 'ஒரு ரூபாய் செலவு செய்வதாக இருந்தாலும், எனக்கு கோப்பு அனுப்ப வேண்டும்' எனக் கூறி, அமைச்சரவையை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்டார். பின், கோப்புகளை அனுப்பி வைத்தேன்.கடைசி நேரத்தில் அனுமதி கொடுத்து, மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தினார்.
புதுச்சேரி மாநில வளர்ச்சியில், கவர்னருக்கு அக்கறை இல்லை. இவை அனைத்திற்கும், இம்மாதம் முற்றுப்புள்ளி வைக்கப்படும். நாங்கள் வெளிநாடு செல்ல, கவர்னரிடம் அனுமதி பெற வேண்டும் என விதி உள்ளதா.கவர்னர் கிரண்பேடி, சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கச்சி போல் செயல்படுகிறார். நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. கவர்னருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்று எந்த மாநிலத்திலும் கவர்னர்கள் நடந்து கொண்டதில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE