மம்தாவுக்கு ஓவைசி, குட்டு| Dinamalar

மம்தாவுக்கு ஓவைசி, 'குட்டு'

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (23)
 மம்தா, ஓவைசி, 'குட்டு'

ஐதராபாத்: 'முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று கூறியதன் மூலம், மேற்கு வங்கத்தில் தன் பிடியை, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி இழந்துவிட்டார் என்பது நிரூபணமாகிவிட்டது' என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.


மூளை சலவை







மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், மம்தா பானர்ஜி பேசியதாவது:ஹிந்து மத அடிப்படைவாதிகள் போல, நாட்டில் முஸ்லிம் பயங்கரவாதிகளும் உள்ளனர். இவர்கள் மக்களை மூளை சலவை செய்கின்றனர்.
ஹிந்து அடிப்படைவாதி களிடம் எச்சரிக்கையாக இருப்பதுபோல், மேற்கு வங்க மக்கள், இந்த முஸ்லிம் பயங்கரவாதிகளிடம் இருந்தும் விலகி இருக்க வேண்டும்.இந்த முஸ்லிம் பயங்கரவாதம், ஐதராபாத்தில் இருந்து திணிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின், எம்.பி.,யாக உள்ளார்.

அவருடைய பெயரைக் குறிப்பிடாமல், மம்தா பானர்ஜி இவ்வாறு பேசிஉள்ளார்.இதற்கு ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கூறியுள்ளதாவது:ஐதராபாத்தில் இருந்து வருவோர் குறித்து, மம்தா கவலை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், நிலத்தில் உள்ள, 42 தொகுதிகளில், 18 தொகுதிகளில் பா.ஜ., எப்படி வென்றது என்பது குறித்தும் அவர் தெரிவிக்க வேண்டும்.


குழப்பம்



மம்தாவின் பிடியில் இருந்து மேற்கு வங்கம் நழுவி வருகிறது. ஆட்சி அதிகாரத்தால், திரிணமுல் காங்கிரசார் திமிர் பிடித்து அலைகின்றனர். அதை திருத்துவதற்கு மம்தா முயற்சிக்கவில்லை. மாநிலத்தில் அடுத்தடுத்து தோல்வியை சந்திப்பதால், இவ்வாறு குழப்பத்தில் பேசுகிறார்.நாட்டிலேயே மேற்கு வங்கத்தில்தான் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் நிலை மோசமாக உள்ளது என்பதை அவர் உணர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X