லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மருத்துவ சிகிச்சைக்காக நேற்று, பிரிட்டனின் லண்டன் நகருக்கு புறப்பட்டார். அங்கு அவர், நான்கு வாரங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறவுள்ளார்.
அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 69. ஊழல் வழக்கில் சிக்கிய இவருக்கு, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த மாதம் மற்றொரு வழக்கில் சிக்கியதால், போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையே, நவாஸ் ஷெரீபுக்கு, இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவ சிகிச்சைக்காக, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகருக்கு செல்வதற்கு அனுமதி கோரினார். பாக்., நீதிமன்றம், அவருக்கு நான்கு வாரம் அனுமதி அளித்தும், பாக்., அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியது.
'நவாஸ் ஷெரீப், 700 கோடி ரூபாய்க்கு பிணைப்பத்திரம் வழங்க வேண்டும்' என, பாக்., அரசு தெரிவித்தது. இதை எதிர்த்து, நவாஸ் ஷெரீப் சார்பில், லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பாக்., அரசின் நிபந்தனையை ரத்து செய்தது.
இதையடுத்து, நவாஸ் ஷெரீப், 'ஏர் ஆம்புலன்ஸ்' மூலம், நேற்று லாகூரில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டார். அவரது சகோதரர் ஷபாஸ் ஷெரீப், உடற்பயிற்சியாளர் அட்னான் கான் ஆகியோர், உடன் செல்கின்றனர்.
லண்டனில் உள்ள மருத்துவமனையில் நான்கு வாரங்கள் சிகிச்சை செய்த பின், மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, நவாஸ் ஷெரீப்புக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக நீதிமன்ற அனுமதி பெறவும் முடிவு செய்துள்ளனர்.
முஷாரப்புக்கு மரண தண்டனையா?
கடந்த, 2001 - 08ல், பாக்., அதிரபாக இருந்தவர் முஷாரப், 76. ராணுவ தளபதியாகவும் இருந்தார். இவர் அதிபராக இருந்தபோது, நாட்டில் சட்டவிரோதமாக அவசரநிலையை அமல்படுத்தியதாக, தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், பாக்., சிறப்பு நீதிமன்றம் விசாரணையை முடித்துள்ளது. வரும், 28ல் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. முஷாரப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை கிடைக்கலாம்.
முஷாரப், தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், மருத்துவ சிகிச்சைக்காக தங்கியுள்ளார். இதை காரணமாக வைத்து, இந்த வழக்கின் விசாரணைக்கு, அவர், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.