இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரின் தற்போதைய நிலை எப்படி உள்ளது என்பது பற்றியும், காஷ்மீர் குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தும் மத்திய அமைச்சர் அமித்ஷா, ராஜ்யசபாவில் இன்று (நவ.20) விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர், இணைய சேவையை பொறுத்தவரை காஷ்மீர் அதிகாரிகள் தான் முடிவு எடுக்கின்றனர். பாக்.,கை சேர்ந்த போராட்டக்காரர்களும் காஷ்மீரில் உள்ளனர். அதனால் பாதுகாப்பை மனதில் வைத்து அதிகாரிகள் அதற்கு தகுந்த முடிவை எடுக்கிறார்கள். காஷ்மீரில் தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது. அதனால் எந்த பிரச்னையும் இல்லை. மொபைல் மருத்துவ வேன்களும் இயக்கப்பட்டு வருகிறது. சுகாதார சேவைகளையும் மாநில நிர்வாகம் கவனித்து வருகிறது.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு சிலிண்டர், அரிசி ஆகியன போதிய அளவில் உள்ளது. 22 லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள்கள் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உற்பத்தி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து லேண்ட்லைன் சேவைகளும் இயங்குகின்றன. எனது இந்த உண்மைகளுக்கு குலாம் நபி ஆசாத் முடிந்தால் பதில் அளிக்கட்டும் என சவால் விடுகிறேன். ஒரு மணி நேரம் கூட இது பற்றி நான் விவாதிக்க தயாராக உள்ளேன். ஆனால் எனது இந்த புள்ளி விபரங்களுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

அனைத்து உருது, ஆங்கில செய்திதாள்கள் மற்றும் டிவி சேனல்கள் செயல்படுகின்றன. வங்கி சேவைகளும் முழுமையாக இயக்கப்படுகின்றன. அனைத்து அரசு அலுவலகங்கள், கோர்ட்கள் ஆகியன திறந்துள்ளன. தடுத்து நிறுத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதில் 98.3 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. ஆக., 5 ம் தேதி 370 நீக்கப்பட்ட பிறகு போலீசார் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. மக்கள் யாரும் ரத்தம் சிந்தவில்லை. கல்வீச்சு சம்பவங்களும் குறைந்து விட்டன.
இந்து, புத்த, சீக்கிய, ஜெயின், கிறிஸ்தவ, பார்சி இன அகதிகள் குடியுரிமை பெற்றுள்ளனர். இதற்காக தான் குடியுரிமை திருத்த மசோதா தேவை. மதத்தின் பேரால் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் பாக், வங்கதேசம் அல்லது ஆப்கானிஸ்தான் நாட்டினர் இந்திய குடியுரிமை பெறுவது தடுக்கப்படுகிறது.

தேசிய குடியுரிமை பதிவு முறை நாடு முழுவதும் கொண்டு வரப்படும். இதற்காக எந்த மதத்தை சார்ந்தவர்களும் பயப்பட தேவையில்லை. அனைவரையும் தேசிய குடியுரிமை பதிவின் கீழ் கொண்டு வரவே இந்த திட்டம். வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர உரிமை கோர முடியும். பழங்குடியினத்தினர் அசாம் முழுவதம் உள்ளனர். அவர்கள் பழங்குடி இனத்தில் சேருவதற்கான செயல்பாடுகளுக்கு பணம் இல்லாவிட்டால், வழக்கறிஞருக்கான செலவை அசாம் அரசு ஏற்கும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE