புதுடில்லி, :'நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு, காங்., தலைவர் சோனியா மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பை, மீண்டும் அளிக்க வேண்டும்' என, ராஜ்யசபாவில் காங்., வலியுறுத்தியது.
காங்., தலைவர் சோனியா, அவருடைய மகனும் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல், மகளும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு சமீபத்தில் திரும்பப் பெறப்பட்டது.பாதுகாப்பு'இசட் பிளஸ்' பிரிவில், அவர்களுக்கு, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
காங்.,கைச் சேர்ந்த முன்னாள்பிரதமர் மன்மோகன் சிங், அவருடைய மனைவி குருசரண் சிங் கவுர் ஆகியோருக்கும், எஸ்.பி.ஜி., பாதுகாப்பு மாற்றப்பட்டு, சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது.சோனியா மற்றும் அவருடைய குடும்பத்தாரின் பாதுகாப்பு மாற்றப் பட்டதற்கு, காங்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பார்லி.,யிலும் இந்தப் பிரச்னையை, காங்., எழுப்பி வருகிறது.
இந்நிலையில், ராஜ்யசபாவில், இந்தப் பிரச்னை மீண்டும் எழுப்பப்பட்டது. சபையில், நேற்று கேள்வி நேரத்துக்குப் பின், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான ஆனந்த் சர்மா பேசியதாவது:சோனியா, அவருடைய குடும்பத்தார் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எஸ்.பி.ஜி., பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதன் மூலம், அது அதிகரித்துள்ளது. இவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோருக்கான பாதுகாப்பில் எந்த மாற்றத்தையும் செய்ய வில்லை.அரசியலுக்கு அப்பாற்பட்டு, இந்தப் பிரச்னையை பார்க்க வேண்டும். அவர்களுடைய பாதுகாப்பு குறித்து மறுஆய்வு செய்து, நாட்டின் நலனுக்காக மீண்டும், எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால், அரசின் நோக்கம் குறித்த கேள்வி எழும்.இவ்வாறு, அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சாமி கூறியதாவது:மத்திய உள்துறை அமைச்சகம், மிகவும்தீவிரமாக ஆலோசித்து, இந்த முடிவை எடுத்துள்ளது. பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்கு, சிறப்பு குழு உள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைபடியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த முடிவில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீதிமன்றத்தை தாராளமாக அணுகலாம்.
அச்சுறுத்தல்
ராஜிவ் படுகொலையைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல்இருந்ததால் தான், சோனியா உள்ளிட்டோருக்கு, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வழங்கப்பட்டது. இலங்கையில் நடந்த இறுதிப் போருக்கு பின், விடுதலைப் புலிகள் அமைப்பே இல்லை. அவ்வாறு இருக்கும்போது, அச்சுறுத்தல் எப்படி இருக்க முடியும்.இந்த விவகாரத்தில் காங்., இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. ஒரு பக்கம் அச்சுறுத்தல் என கூறுகிறார்கள். அதே நேரத்தில், ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கூறுகிறார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் அச்சுறுத்தல் இல்லை என்பதாலேயே, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதில், அரசியல் ஏதும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார். இந்நிலையில், சோனியா உள்ளிட்டோருக்கு, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு விலக்கி கொள்ளப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் காங்., தொண்டர்கள், டில்லியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உருவ பொம்மையை அவர்கள் எரித்தனர்.'
எல்லாம் முடிந்துவிட்டது'
மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்தஅதிகாரிகள் கூறியதாவது:மிகவும் தீவிரமாக ஆலோசித்து, பல்வேறு தகவல்களின் அடிப்படையிலேயே, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எல்லாம் முடிந்து விட்டது. மறு ஆய்வு என்பதற்கு பேச்சே இல்லை. காங்., எத்தனை முறை கேட்டாலும், பார்லி.,யில் பிரச்னையை எழுப்பினாலும், முடிவில் மாற்றம் இருக்காது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE