உள்ளாட்சி தேர்தலில், தமிழக மக்கள் உரிமை பறிபோனது. மாநகராட்சி மேயரை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் தலைவரை, இனி நாம் தேர்வு செய்ய முடியாது. மறைமுக தேர்தல் வழியே, கவுன்சிலர்களே தேர்வு செய்ய, தமிழக அரசு, நேற்று பிறப்பித்த அவசர சட்டம் வழி செய்துள்ளது. இதனால், மாநகராட்சி, நகராட்சிகளில், 'குதிரை பேரம்' ஏற்பட்டு, கவுன்சிலர்கள், 'கல்லா கட்ட' அமோக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 1996ல் இருந்து, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ், உள்ளாட்சி தேர்தல் நடத்தப் படுகிறது. அந்த ஆண்டு, மாநகராட்சி கவுன்சிலர்கள், மேயர்; நகராட்சி கவுன்சிலர்கள், தலைவர்; பேரூராட்சி கவுன்சிலர்கள், தலைவர்; ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள்; மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர் ஆகியோர், மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர்.
5 ஆண்டுக்கு ஒருமுறை
மாநகராட்சி துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் துணை தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணை தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோர், கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.உள்ளாட்சி தேர்தல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
1996ல், தி.மு.க., ஆட்சியில் நடத்தப்பட்டது போல், 2001ம் ஆண்டில், ஜெ., ஆட்சியிலும் நேரடி தேர்தல் நடத்தப்பட்டது. அடுத்து, 2006ல், தி.மு.க., ஆட்சியில், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களையும், கவுன்சிலர்களை தேர்வு செய்யும், மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.மீண்டும், 2011ல், அ.தி.மு.க., ஆட்சியில், நேரடி தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது. அந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக் காலம், 2016ல் நிறைவடைந்தது.
சட்ட திருத்தம்
அதையடுத்து, அ.தி.மு.க., ஆட்சியில், மேயர் மற்றும் தலைவர்களை, கவுன்சிலர்கள் தேர்வு செய்ய வழிவகுக்கும், மறைமுக தேர்தல் நடத்த, சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், வார்டு வரையறை முறையாக செய்யப்படவில்லை என, தி.மு.க., நீதிமன்றம் சென்றதால், தேர்தல் தடை செய்யப்பட்டது.ஜெயலலிதா மறைவுக்கு பின், 2018ல், அ.தி.மு.க., அரசு, மறுபடியும் நேரடி தேர்தல் நடத்த, சட்டம் இயற்றியது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான, ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது.எப்போது வேண்டுமானாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகள், மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளை, அதிகம் கேட்டு நெருக்கடி கொடுத்தன.
இதைத் தவிர்க்க, அ.தி.மு.க., அரசு, மறைமுக தேர்தல் நடத்த, நேற்று அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை, மக்கள் நேரடியாக தேர்வு செய்ய முடியாது. வார்டு கவுன்சிலர்கள் தான், அவர்களை தேர்வு செய்வர்.
சட்ட விளக்கம்:
மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள், கட்சிகள் அடிப்படையில், தேர்வு செய்யப்படுகின்றனர்.
கட்சி அடிப்படை
ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டும், கட்சி அடிப்படையில், தேர்தல் நடத்தப்படுவதில்லை.ஊராட்சி ஒன்றியம்,மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்,கட்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டாலும், தலைவர் மற்றும் துணை தலைவர்கள், மறைமுக தேர்தல் அடிப்படையில், கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மேயர் மற்றும் தலைவர்கள், ஒரு கட்சியை சேர்ந்தவராகவும், அதிக உறுப்பினர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருந்தால், அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவதில்லை. இதனால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி செயல்பாடுகள் ஸ்தம்பிக்கும்.எனவே, கவுன்சிலர்களே, மேயர் மற்றும் தலைவர்களை தேர்வு செய்யும்போது, இப்பிரச்னை தவிர்க்கப்படும்.
எனவே, மறைமுக தேர்தல் நடத்தும்படி, பல்வேறு அமைப்புகளிடம் இருந்து, கோரிக்கை மனுக்கள் வந்தன. அதன் அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மறைமுக தேர்தல் நடத்த, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவசர சட்டம், நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
நேரடி தேர்தல் ரத்து!
தமிழக அரசின் அவசர சட்டத்தால், 664 பதவிகளுக்கான நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகள் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு, நேரடி தேர்தல் நடத்துவதற்கு திட்டமிடப் பட்டது. இதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கவனம் செலுத்தி வந்தனர்.
தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 664 பதவிகளுக்கான நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் உள்ள, 1,064 கவுன்சிலர்கள், நகராட்சிகளில் உள்ள, 3,468 கவுன்சிலர்கள், பேரூராட்சிகளில் உள்ள, 8,288 கவுன்சிலர்கள் பதவிகளுக்கு மட்டும், நேரடி தேர்தல் நடக்க உள்ளது. மொத்தத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள, 12 ஆயிரத்து, 820 வார்டுகளுக்கு மட்டுமே, நேரடி தேர்தல் நடக்கவுள்ளது.
ஒப்புதல் எப்போது?
அவசர சட்டம் கொண்டு வந்தால், அரசிதழில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து, ஆறு மாதங்களுக்குள், சட்டசபையை கூட்டி, அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். எனவே, அரசு விரும்பினால், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, சட்டசபையை கூட்டி, அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெறலாம் அல்லது தேர்தல் முடிந்த பின் கூட, சட்டசபையில் ஒப்புதல் பெறலாம்.
''சட்டத்திற்கு அப்பாற்பட்டு, எதுவும் செய்யவில்லை. இது, ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டது. முதல்வரை, எம்.எல்.ஏ.,க்களும், பிரதமரை, எம்.பி.,க்களும் தேர்வு செய்கின்றனர். அதே முறையை பின்பற்ற உள்ளோம். இதில், பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. எப்படி தேர்தல் நடக்கும் என்பதற்கும், தேர்தல் நடக்குமா, நடக்காதா என்பதற்கும், முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது.
ஜெயகுமார், மீன்வளத்துறை அமைச்சர்
அவசர சட்டம் ஸ்டாலின் கண்டனம்
மறைமுக தேர்தல் முறை வாயிலாக, சர்வாதிகாரத்துடன், உள்ளாட்சி தேர்தலை நடத்த, அ.தி.மு.க., அரசு முயற்சிக்கிறது. மேயர் பதவிக்கு, மறைமுக தேர்தல் கொண்டு வரப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தி.மு.க., ஆட்சியில், அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் இருந்த சூழ்நிலை வேறு; தற்போதைய சூழ்நிலை வேறு. உள்ளாட்சி அமைப்புகளில், உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாததால், அப்போது, மறைமுக தேர்தல் முறை வந்தது. தற்போது, மறைமுக தேர்தல் முறையை புகுத்த, அவசர சட்டம் பிறப்பித்தது கண்டிக்கத்தக்கது.
ஸ்டாலின், தி.மு.க., தலைவர்
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE