பரூக் அப்துல்லா கைது விவகாரத்தில், விதிகளை மேற்கோள்காட்டி, ஒட்டுமொத்த சபையின் உரிமையும் மீறப்பட்டுவிட்டதாக, தி.மு.க., -- எம்.பி., குற்றம்சாட்டியதால், லோக்சபாவில், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
குளிர்கால கூட்டத்தொடரின், முதல் இரண்டு நாட்கள், பெரும் அமளியுடன் துவங்கியது போலில்லாமல், மூன்றாவது நாளான நேற்று, எந்த பிரச்னையும் இல்லாமல் தான், துவங்கியது. ஆனால், கேள்வி நேரம் முடிந்து, பூஜ்ய நேரம் துவங்கியதும், மத்திய சென்னை, தி.மு.க., எம்.பி., தயாநிதி, எழுந்து, தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா விவகாரத்தை கிளப்பினார்.
இது குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டுமென, தயாநிதி தரப்பில், 'நோட்டீஸ்' தரப்பட்டும், அதை, சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்காததால், தன் வாதத்தை, இன்னொரு வடிவத்தில் ஆரம்பித்தார்.லோக்சபா விதிமுறைகள் அடங்கிய கையேட்டை உயர்த்திப் பிடித்த தயாநிதி, 'ஒட்டுமொத்த சபைக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதால், உரிமை கோரும் தீர்மானத்தை கொண்டு வருகிறேன்' என, அவர் குறிப்பிட்டதும், சபை அதிர்ந்தது.
விதிகளை மீறிவிட்டதாக கூறி, எம்.பி., அமைச்சர் என, தனி நபர்கள் மீதுதான் உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருவது, வழக்கம். ஆனால், தயாநிதி கூறுவது போல, ஒட்டுமொத்த சபையின் உரிமையையும் மீறியது யார் என்ற பரபரப்பு எழுந்தது.தொடர்ந்து பேசிய தயாநிதி, கூறியதாவது:
சபாநாயகர் ஆகிய நீங்கள் உள்பட, இங்கிருக்கும் அனைவரின் உரிமையும் மீறப்பட்டுள்ளது. நீங்கள், இதை எப்படி வேடிக்கை பார்க்கலாம். உங்களுக்காகவும் சேர்த்து தான் நான் பேசுகிறேன். கடந்த கூட்டத்தொடரில், 'பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை' என, மத்திய அரசு கூறியது. அதன் பின், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்' என்றது.
எது உண்மை. மத்திய அரசு, பரூக் அப்துல்லாவின் கைது நடவடிக்கையை சபைக்கு கூறாமல், சுப்ரீம் கோர்ட்டுக்கு கூறுகிறது. அதன் பிறகாவது, அரசு, சபாநாயகருக்கு தகவல் தெரிவித்து இருக்கலாம்; சபைக்கும் அறிவித்திருக்கலாம். இதை மீறியதால், சபாநாயகருக்கும், எம்.பி.,க்கள் அடங்கிய லோக்சபாவுக்கும் உள்ள உரிமையை தான் நான் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு, தயாநிதி கூறினார்.
செம்மொழி விருதுகள் வழங்க வேண்டும்தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில், தி.மு.க., - எம்.பி., பாலு பேசியதாவது:செம்மொழியான, தமிழ் ஆய்வில் சிறந்து விளங்கும் தமிழறிஞர்களுக்கு தரப்படும் செம்மொழி விருதுகள், பல ஆண்டுகளாக தரப்படவில்லை. அவற்றை, மீண்டும் வழங்க வேண்டும்.செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தில், இயக்குனர், பதிவாளர் உள்பட, 143 இடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை விரைந்து நிரப்பிட, மத்திய அரசு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசியதாவது:கடல் அரிப்பின் காரணமாக, மூன்றில் ஒருபங்கு கடலோரப்பகுதிகளை, இந்தியா இழந்துவிட்டதாக, ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் மட்டும், 41 சதவீதம் கடலோரப்பகுதிகளை இழக்க நேர்ந்துள்ளது.இதில், தூத்துக்குடி வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது. கடலோர கிராமங்கள் பல, காணாமல் போகும் நிலை உருவாகியுள்ளது. இப்பிரச்னைக்கு, வெறும் தடுப்புச்சுவர்கள் கட்டுவது மட்டுமே போதுமானது அல்ல. கடல் அரிப்பைத் தடுக்க, மத்திய அரசு, நிரந்த தீர்வு காண முன் வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
வழக்காடு மொழியாக்குங்கள்
ராஜ்ய சபாவில் தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா பேசியதாவது:நீதிமன்றங்களில், வழக்காடு மொழியாக, அந்தந்த மாநில மொழிகளே இருக்க வேண்டும். வழக்கு போட்டவர்களுக்கு மட்டுமல்லாது, வழக்கை நடத்தும் வழக்கறிஞர்களுக்கும், அது வசதியாக இருக்கும். அந்த வகையில், தமிழ் மொழியை, மெட்ராஸ் ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக ஆக்க வேண்டுமென்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக, நிலுவையில் இருந்து வருகிறது. அதை உடனடியாக நிறைவேற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
அ.தி.மு.க., - எம்.பி., செல்வராஜ் பேசியதாவது:பொதுமக்கள், அன்றாடம் பயன்படுத்தும், பால், சமையல் எண்ணெய், பருப்பு, மஞ்சள் துாள், மிளகாய் துாள் என, பல பொருட்களிலும் கலப்படம் செய்யப்படுவது வேதனையளிக்கிறது. நாட்டின், 68 சதவீத பாலில், வேதிப்பொருட்கள் கலந்து உள்ளதாக, ஓர் ஆய்வு கூறுகிறது. இது, வருங்கால தலைமுறையினருக்கு ஆபத்தானது. கலப் படத்தை தடுப்பதற்கு, அரசு எடுக்கும் நடவடிக்கைகள், போதுமானதாக இல்லை. இப்பிரச்னை யில், இன்னும் துரிதமாகவும், கடுமையாகவும், அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE