கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்குகளில் எத்தனை குற்றப்பத்திரிகை?

Added : நவ 21, 2019
Advertisement

சென்னை,: 'சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு, சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பின், எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகத்தில், சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க, போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேலை, சிறப்பு அதிகாரியாக, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' நியமித்தது. இவரது தலைமையிலான பிரிவுக்கு, உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
'மாதங்கள் கடந்தும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உரிய வசதிகளை செய்து தரவில்லை' என, உயர் நீதிமன்றத்தில், அவமதிப்பு வழக்கை, பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு, டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாஸ், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் மகாராஜா, பொன் மாணிக்கவேல் சார்பில், வழக்கறிஞர் செல்வராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாஸ் வாதாடியதாவது:
உச்ச நீதிமன்றத்தில் தான், அவமதிப்பு வழக்கு தொடர முடியும். சிலை கடத்தல் வழக்குகள் குறித்த விசாரணை அறிக்கையை, கூடுதல் டி.ஜி.பி.,யிடம் அளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் பின்பற்றவில்லை. உயர் அதிகாரிகள் நடத்தும் கூட்டங்களிலும், அவர் கலந்து கொள்வதில்லை.
நீதிமன்ற உத்தரவை, அரசு பின்பற்றி உள்ளது; பொன் மாணிக்கவேல் தான் பின்பற்றவில்லை. கூடுதல் டி.ஜி.பி.,யிடம், ஏன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என, அவரிடம் கேட்க வேண்டும். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு, கூடுதல் டி.ஜி.பி., தான் தலைவராகவும் உள்ளார்.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு, ௩௧ கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொன் மாணிக்கவேல் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கான விபரங்கள் உள்ளன. இதுவரை, ஒரு வழக்கில் கூட, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.இவ்வாறு, அவர் வாதாடினார்.
பொன் மாணிக்கவேல் சார்பில், வழக்கறிஞர் செல்வராஜ், ''சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு, தேவையான போலீசை நியமிக்கவில்லை. சுதந்திரமாக இயங்க முடியவில்லை. அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை,'' என்றார்.விசாரணையின்போது, நீதிபதிகள் கூறியதாவது:
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவும், அரசின் ஒரு அங்கம். இந்தப் பிரிவுக்கு ஒதுக்கியதாக கூறப்படும் தொகையில், பணியாற்றுபவர்களின் சம்பளத்தை எல்லாம் சேர்க்கக் கூடாது. உள்கட்டமைப்பு வசதிக்காக ஒதுக்கிய தொகையை தெரிவிக்க வேண்டும்.
சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பின், எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது? நீதிமன்ற உத்தரவுகளில் பின்பற்றப்பட்டது, பின்பற்றப்படாதது குறித்து, அரசு தரப்பும், பொன் மாணிக்கவேல் தரப்பும், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.விசாரணையை, வரும், ௨௫ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X