சனி கிரகத்தின் துணைக் கோள்களுள் மிகப் பெரிதான, டைட்டனின் தரை அமைப்பு வரைபடத்தை, 'நாசா' விஞ்ஞானிகள் முழுமையாக தயாரித்துள்ளனர்.
டைட்டனின் மலைகள், பள்ளத்தாக்குகள், திரவ மீத்தேன் ஏரிகள், விண் கற்கள் தாக்கிய பெரும் பள்ளங்கள் என்று சகலத்தையும் நாசா அந்த வரைபடத்தில் குறித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா அனுப்பிய, 'காசினி' விண்கலன், 2004 முதல், 2017 வரை டைட்டன் கிரகத்தை, 126 முறை வலம் வந்து, சேகரித்து பூமிக்கு அனுப்பிய தரவுகளின் அடிப்படையில், விஞ்ஞானிகள் இந்த வரைபடத்தை உருவாக்கிஉள்ளனர்.
பெரும்பாலான டைட்டன் வளிமண்டலம் அடர்த்தியான வாயுக்களைக் கொண்டிருப்பதால், தரைப் புகைப்படங்கள் தெளிவாக இருக்காது. எனவே, அகச் சிவப்பு படப்பிடிப்பு, ரேடார் தரவுகளை வைத்தே, டைட்டனின் தரை அமைப்பை விஞ்ஞானிகள் வரைந்துள்ளனர்.
இந்த வரைபடம், டைட்டனின் தோற்றம், பரிணாமம் போன்றவற்றை ஆராயவும், அங்கு நிலவும் பருவங்கள், தரைக்கடியில் உள்ள தாதுக்கள் போன்றவற்றை ஆராய்ந்து அறிய உதவும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE