பசுமை அடர்ந்த வனப் பகுதியில், சில நாட்கள் செலவிடுவது, உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் நல்லது. அண்மையில் வெளிவந்துள்ள பல ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன.
அந்த வகையில், ஒரு நாட்டின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளுக்கு, மக்கள் ஆண்டுக்கு சில முறை சென்று வருவதால், பொருளாதாரத்திற்கு எதைவது நேரடி பயன் உண்டா?
இதைத் தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிபித் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் பொருளியலாளர்கள் குழு அண்மையில் ஆராய்ந்து உள்ளது.
அந்த ஆய்வின்படி, ஆஸ்திரேலியாவின் பாதுகாக்கப்பட்ட தேசிய காட்டுயிர் பூங்காக்களால், ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு கிடைக்கும் பலனின் மதிப்பு, 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
வனப்பகுதிகளில் சென்று குடும்பத்துடன் தங்குவது, மலையேற்றம், நடை செல்வது போன்றவற்றால் மனச்சுமை, பதற்றம் போன்றவை குறைகிறது. துாய சூழலால் உடல் சோர்வை போக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகிறது.
இவற்றால் ஆஸ்திரேலியாவின் மருத்துவ, மனநல செலவுகள் கணிசமாக குறைவதால், இத்தனை பில்லியன்கள் அந்நாட்டுக்கு லாபம் என, 'நேச்சர் கம்யூனிகேஷன்' இதழில் வெளியான அந்த ஆய்வு தெரிவிக்கிறது.