உலகெங்கும் நவீன கழிப்பறைகளை சுத்தம் செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் செலவாகிறது தெரியுமா? தினமும், 141 பில்லியன் லிட்டர்கள்!
ஒருவர் பயன்படுத்திய பிறகு கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வேண்டியிருப்பதுதான் இதற்குக் காரணம். வேகமாக தண்ணீரைப் பாய்ச்சி, கழிப்புக் கலனில் ஒட்டியிருக்கும் கழிவு, சிறுநீர் போன்றவற்றை கழுவினால்தான், அடுத்த ஆள் அருவருப்பு இல்லாமல் பயன்படுத்த முடியும். இதற்குப் பயன்படுவது பெரும்பாலும் நல்ல தண்ணீர் என்பது மேலும் கவலை தரும் செய்தி.
எனவே, கழிப்பிட நீர் செலவை பெருமளவு குறைக்க, அமெரிக்காவிலுள்ள பென் ஸ்டேட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், ஒரு பூச்சு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த பூச்சு, இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதலாவது, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட பாலிமர் திரவம். இதை டாய்லெட்டின் மேல், 'ஸ்பிரே' செய்யவேண்டும்.
இது கழிப்பிடத்தில் தண்ணீர் ஒட்டாமல் செய்யக்கூடியது. இந்த ஸ்பிரே காய்ந்ததும், இரண்டாவது திரவ ஸ்பிரேவினை அடித்து விட வேண்டும். இதுவும் நீர் ஒட்டாத தன்மையை அதிகரிக்கும். இரண்டு படலங்களும், 500 முறை நீர் விட்டு கழுவும் வரை டாய்லெட்டின் மேற்பரப்பில் இருக்கும். பிறகு, மீண்டும் இரண்டு ஸ்பிரேக்களையும் அடிக்க வேண்டும்.
இந்த பூச்சுப் படலத்தால், தண்ணீர் மற்றும் மனிதக் கழிவு துளியும் டாய்லெட்டில் ஒட்டாமல், குழிக்குள் போய்விடும். தவிர, கிருமிகள் மேற்பரப்பில் இல்லாமல் செய்வதோடு, துர்நாற்றத்தையும் அறவே போக்கிவிடுகிறது. பொதுக் கழிப்பிடங்களுக்கு இது அவசரம், அவசியம்.