லதேஹர் : ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரத்தின் போது, அயோத்தி ராமர் கோவில், காஷ்மீர் விவகாரத்திற்கு பா.ஜ., தலைவர் அமித்ஷா முக்கியத்துவம் அளித்தார்.
ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 30, டிச., 6,12,16 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் முடிவுகள் டிச.,23 அன்று அறிவிக்கப்பட உள்ளது. இங்கு, தற்போது பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள அக்கட்சி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது.
லதேஹார் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேசியதாவது : அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். அயோத்தி வழக்கை தொடர்ந்து விசாரிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. தற்போது, அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஓட்டு வங்கி அரசியலுக்காக காஷ்மீரில் பிரச்னை தொடர, காங்கிரஸ் அனுமதி அளித்தது. ஆனால், பிரதமர் மோடி, சிறப்பு சட்டத்தை நீக்கி, காஷ்மீரை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்துள்ளார்.மன்மோகன் ஆட்சியின் போது, ஜார்க்கண்ட் வளர்ச்சிக்கு 13வது நிதிக்குழு, ரூ.55,253 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. மோடி ஆட்சி காலத்தில் ரூ.3,08,487 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மணிகா என்ற இடத்தில் அமித்ஷா பேசும் போது; மிகவும் பின் தங்கிய பகுதியான ஜார்க்கண்டை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் நீண்ட காலமாக போராடினர். இதற்காக பலர் உயிரிழந்துள்ளனர். பலர் தியாகம் செய்துள்ளனர். பிர்ஸா முண்டா காலத்தில் இருந்து நடந்த போராட்டத்திற்கு வெற்றி தேடி தந்தது பா.ஜ., தான். காங்கிரஸ் அதனை செய்ய முன்வரவில்லை. வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தான் ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரகுபர்தாஸ் ஆட்சிகாலத்தில் மாநிலம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE