வயநாடு: பள்ளி வகுப்பறையில் பாம்பு கடித்து பலியான மாணவிக்கு இழப்பீடு வழங்குமாறு கேரள முதல்வருக்கு காங். எம்.பி., ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி என்ற பகுதியில் அரசுப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஷீஹாலா என்ற 5-ம் வகுப்பு மாணவி சக மாணவிகளுடன் வகுப்பறையில் இருந்த போது தரையில் இருந்த ஓட்டை வழியே வெளியே வந்த பாம்பு அவரது காலை கடித்துவிட்டது. வலியால் துடித்த மாணவி ஆசிரியையிடம் கூறினார்.

மாணவியின் நிலைமையை அறியாமல் ஆசிரியை அலட்சியமாக இருந்துள்ளார். ஷீஹாலாவின் உடல் முழுவதும் விஷம் பரவத்துவங்கியது. உடன் தந்தையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மாணவியின் தந்தை, அவரை கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இருப்பினும் ஷீஹாலாவின்உடல் நிலை மேலும் மோசம் அடையவே சிகிச்சை பலனின்றி சிறுமி ஷீஹாலா இறந்தார்.மாணவியின் நிலையை அறிந்து அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்திருந்தால் உயிரை காப்பாற்றியிருக்கலாம். அலட்சியமாக இருந்ததாக ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ராகுல் கடிதம்
தகவலறிந்த வயநாடு லோக்சபா தொகுதி காங்.எம்.பி. ராகுல், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார். அதில் பலியான மாணவிக்கு உரிய இழப்பீடு வழங்கிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.