பெங்களூரு,: 'ராணுவப் பயன்பாடு உட்பட, பூமியின் நிலப்பரப்பு குறித்து ஆராய்வதற்கான, 'கார்ட்டோசாட் - 3' என்ற விண்கலம் மற்றும் அமெரிக்காவின், 13 சிறிய விண்கலங்கள் ஆகியவற்றை விண்ணில் செலுத்துவது, 25ல் இருந்து, 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது' என, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இஸ்ரோ நேற்றுவெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:இதுவரையிலும், கார்ட்டோசாட் வகை விண்கலம், எட்டு அனுப்பப்பட்டுள்ளது. அந்த வரிசையில், ஒன்பதாவது விண்கலம் அனுப்பப்பட உள்ளது.தற்போது அனுப்பப்பட உள்ள விண்கலம், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தது. அதாவது, இதற்கு முன் அனுப்பிய விண்கலங்களை விட, இது பல விதங்களில் மேம்பட்டது.பூமியையும், அதன் மேற்பரப்பில் உள்ள அனைத்தையும் மிகவும் துல்லியமாக படம் எடுத்து அனுப்பும். எதிரிகளின் ராணுவ நிலைகள், பதுங்கு குழிகள், ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்டவை குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கும்.இது ராணுவத்துக்கு பெரிய அளவில் உதவும். அதேபோல் விவசாய நிலம், வனப் பகுதிகளை கண்காணிக்கவும் அரசுக்கு உதவும். இயற்கை பேரிடர் நிகழும் இடங்களையும் கணிக்க முடியும். நகரமைப்பு திட்டமிடல் என, பல்வேறு பணிகளுக்கு இந்த விண்கலம் உதவும்.இத்துடன், வணிக ரீதியில், அமெரிக்காவின், 13 சிறிய விண்கலங்களையும் செலுத்த உள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, வரும், 25ம் தேதி காலை, 9:28 மணிக்கு செலுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், வானிலை காரணமாக, தற்போது, 27ம் தேதி காலை, 9:28 மணிக்கு செலுத்த உள்ளோம்.உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கார்ட்டோசாட் விண்கலம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி., சி -47 ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட உள்ள, 74வது ராக்கெட் ஆகும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE