கார்ட்டூன்கள் சிறப்பே 'நச்' என்று நாலுவரியில் முகத்தில் அடித்தாற்போல் கிண்டலும், நையாண்டியுமாக கருத்துக்களைசொல்வது தான். துணை முதல்வர் பன்னீர்செல்வம் அமெரிக்காவில் வழங்கப்பட்ட பட்டங்களுடன் வந்து இறங்கியிருக்கிறார். அவருடைய லக்கேஜ், பின்னால் வரும் என்ற தினமலர் கார்ட்டூன்என்னைக் கவர்ந்தது.
திருவிளையாடல் நாகேஷ் -சிவாஜி பாணியில் சொல்வதானால், 'பிரிக்க முடியாதது எது?
'
'விருதுகளும், வில்லங்கங்களும்”.விருதுகளும், பட்டங்களும் பதவி சார்ந்தவை அல்ல. அவை உழைப்பையும், வெற்றியையும் சார்ந்தவை. ஆனால் அரசியல் வெற்றியையே தங்கள் உழைப்பின் வெற்றியாக நினைத்து அரசியல்வாதிகள் செயல்படுவதால், பதவிக்கு பொருத்தமில்லாத பட்டங்களுக்கு அலைகிறார்கள்.ரஷ்யாவின் அதிபர் குருஷேவ் இந்தியா வந்த பொழுது, பல்கலைகள் அவருக்கு 'கவுரவடாக்டர் பட்டம்' கொடுக்க முனைந்த பொழுது அவர் அதை நாசுக்காக தகுதியில்லை என்று மறுத்து விட்டார்.
திராவிட இயக்கங்கள்
தமிழக அரசியல்வாதிகளுக்கு பட்டம் பெறும் ஆசை திராவிட இயக்கங்களிலிருந்து ஜனித்தது. தலைவர்களை பெயர் சொல்லி அழைக்காமல் பட்டப்பெயர் வைத்து அழைக்கும் வழக்கு திராவிட நாகரிகமாகவே ஆகி விட்டது. இதனால் தான் ஈ.வே.ராமசாமி நாயக்கர் 'ஈரோட்டுச் சிங்கமாகி” 'பெரியார்' ஆக வலம் வருகிறார். படிக்காத காமராஜருக்கு எதிராக எம்.ஏ., படித்த அண்ணாத்துரை 'அறிஞர் அண்ணா' ஆனார்.நெடுஞ்செழியன் 'நாவலர்' ஆனார்.
1967ல் காங்கிரசை தோற்கடித்து முதல்வரான அண்ணாதுரைக்கு அமெரிக்காவின் யேல் பல்கலை தனது சொந்த தேவைக்காக முதல்வருக்கு ஒரு பெல்லோஷிப் (நட்புறவு விருது) வழங்கியது. யேல் பல்கலை இணைய தளத்தில் பார்த்தால் சில வடநாட்டு நடிகர்களுக்கும் இது வழங்கப்பட்டுள்ளது தெரியும். ஆனால் அந்த நட்பு விருதை இங்குள்ள தம்பிகள் அண்ணாவுக்கு 'அமெரிக்கா”வே டாக்டர் பட்டம் வழங்கி விட்டது என குதுாகலித்து கொண்டாடினார். தி.மு.க.,வின் அன்பழகன் 'பேராசிரியர்' ஆனார். பின்னாளில் ஜெயலலிதா இவரை டுட்டோரியல் காலேஜ் பேராசிரியர் என்றுகிண்டலடித்தது தனிக்கதை.
உச்சம் தொட்டவர்
பட்டங்களில் உச்சம் தொட்டவர் கருணாநிதி; அவர் பெயரே மறந்து போகும் அளவிற்கு அவர் கலைஞர் ஆகிவிட்டார். முதல்வரான கருணாநிதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அண்ணாமலைப் பல்கலை அறிவித்தது. எந்த மாணவர்களின் போராட்டத்தால் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததோ, அந்த மாணவர்கள்கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்குவதை எதிர்த்து கிளர்ச்சி செய்தனர்.
அந்தக் கலவரத்தை அடக்க போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்த, மறுநாள் குளத்தில் காயங்களுடன் மாணவன் உதயகுமாரின் சடலம் மீட்டெக்கப்பட்டது. ஆட்சேபங்கள் அளவு மீற உதயகுமாரின் தந்தை இறந்தது என் மகன் அல்ல என்று சொன்னார். அப்படியானால் அண்ணாமலை பல்கலையில் படித்த மாணவன் உதயகுமார் என்ன ஆனான் என்ற கேள்விக்கு 47 ஆண்டுகளாக பதிலில்லை. ஆனால் கருணாநிதி டாக்டர் கலைஞர் என்று அழைக்கப்பட்டார்.
எம்.ஜி.ராமச்சந்தர்- எம்.ஜி.ராமசந்திரனாக பெயர் மாறி எம்.ஜி.ஆர்., ஆக மாறி திரையுலகத்தில் மக்கள் திலகமாக மாறினார். அந்த மூன்றெழுத்து பெயர் அரசியல் வானில் ஜொலிக்கக் காரணம் அவர் ஒரு 'புரட்சி நடிகராக” திரைவானில் தோன்றியது தான்.
எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்த பொழுது கருணாநிதி 'புரட்சி நடிகர்” பட்டம் தந்ததே நான் தான் என அறிக்கை விட கே.ஏ.கிருஷ்ணசுவாமி மூலம் 'புரட்சி நடிகர்' 'புரட்சி தலைவர்' ஆக புது அவதாரம் எடுத்தார். அவருடைய அரசியல் வாரிசு ஜெயலலிதா 'புரட்சி தலைவி' ஆக பரிணாமித்தார்.
பல்கலைகள்
தமிழக பல்கலைகள் போட்டி போட்டுக்கொண்டு ஆட்சியிலிருந்த முதல்வர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கி தங்களை கவுரவித்துக் கொண்டன. முதல்வர் பழனிச்சாமிக்கும் தரப்பட்டு விட்டது.அரசியல்வாதி என எடுத்துக் கொண்டால், தன் முயற்சியால் தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
உலகிலேயே அதிகமான கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.மிக பிரபலமாக விளம்பரப் படுத்தப் பட்ட பட்டம் ஜெயலலிதாவின் 'தங்கத் தாரகை' பட்டம். 'அஞ்சா நெஞ்சன்”, 'தீப்பொறி', 'தளபதி' 'எடப்பாடியார்' 'மாவீரன்' 'எழுச்சி தமிழன்” என அரசியல்வாதிகளின் பட்டங்களை எழுத ஆரம்பித்தால் பேனாவில் மை மிஞ்சாது.
இந்த திராவிட மாயைக்கு காங்கிரசும் தப்பவில்லை. காமராஜர் கர்ம வீரராகவும், படிக்காத மேதையாகவும் அவதாரமெடுத்தார். நடிகர் கணேசன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக மாறினார். வயது முதிர்ச்சியின் காரணமாக ஜெயலலிதா, அம்மாவாக அவதாரம் எடுத்து ஜெயலலிதா என்ற பெயரைத் தொலைத்தார்.
அவருடைய உடன்பிறவா சகோதரியின் அரசியல் கனவுகள் பரப்பன அக்ரஹாரத்தில் பொசுங்கி 'சின்ன அம்மா'வாக மாறினார். நல்லகாலம், வட இந்தியத் தலைவர்களுக்கு இந்த மாற்றுப் பெயர் மயக்கம் பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை.
திரையுலகில்
சிவாஜிக்குப் பின் வந்த ஜெய்சங்கர் தென்னகத்து ஜேம்ஸ் பாண்டாகவும், ஜெமினிகணேசன் காதல் மன்னனாகவும் மாறினார்கள். சிவாஜிராவ் பாலசந்தரால் ஆசீர்வதிக்கப்பட்டு ரஜினிகாந்தில் தொடங்கி ரஜினியாக விரிந்து 'சூப்பர் ஸ்டார்' ஆனார். 'காதல் இளவரசன்' கமலின் ரசிகர்கள் ஆஸ்கர் நாயகன் என அழைக்க அவர் 'உலகநாயகனாக' உருமாறினார்.
சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக சுப்ரீம் ஸ்டார், பவர் ஸ்டார் என தோன்றி கால வெள்ளத்தில் காணாமல் போனார்கள்.இதைப்படித்து விட்டு தமிழர்களுக்கு மட்டும் தான் இந்த போலிப்புகழ் மயக்கம் உண்டோ என நீங்கள் வருத்தப்பட வேண்டாம்.அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவுக்கு அவர் பதவியேற்ற 11 மாதத்திலேயே அவருடைய மிகச்சிறப்பான உலக அமைதிப் பணிகளுக்காக, அவருடைய வழிகாட்டி காந்திக்கு கிடைக்காத, நோபல் பரிசு வழங்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளானது.
அரசியல் சாயம்
தி.மு.க., ஆண்டாலும் சரி, அ.தி.மு.க., ஆண்டாலும் சரி ஆட்சியாளர்கள் வழங்கிய விருதுகளில் அரசியல் சாயங்கள் வெளிப்படையாக தெரியும். சினிமா விருதுகளை பற்றி சொல்லவே வேண்டாம். காங்கிரசில் இருந்த சிவாஜிக்கு வழங்கப்படாத சிறந்த நடிகருக்கான விருது எம்.ஜி.ஆருக்கு ரிக்சா காரன் படத்திற்காக வழங்கப்பட்டது.
தாதா சாகேப் பால்கே விருது சிவாஜிக்கு மறுக்கப்பட்டது மட்டுமல்ல அமிதாப் பச்சனுக்கு இந்த ஆண்டு தான் வழங்கப்பட்டது. தனிக்கட்சி கண்ட கமலுக்கு கிடைக்காத திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது ரஜினிக்கு கிடைத்து விட்டது.மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன்னோட்ட மாக சச்சின் டெண்டுல்கர் 2013ல் 'பாரத ரத்னா' சிக்ஸர் அடித்தார் என்பதும் கவனிக்கதக்கது .இந்த கட்டுரைக்கு எனக்கு உங்கள் பாராட்டு கிடைத்தால் அதுவும் ஒரு வகை விருது தானே!-
- டி.எஸ்.ஆர்.வேங்கடரமணா
வழக்கறிஞர்
தென்காசி முன்னாள் எம்.எல்.ஏ.,70101 33663