லக்னோ : 'அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து, 26ல் நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்' என, உத்தர பிரதேச சன்னி மத்திய வக்பு வாரியம் கூறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. 'அந்த நிலத்தில் ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம்' என, கூறப்பட்டுள்ளது. மேலும், 'அயோத்தியில் முக்கியமான இடத்தில் மசூதி கட்ட, முஸ்லிம்களுக்கு, ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்' என்றும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கின் ஒரு தரப்பான, உ.பி., சன்னி மத்திய வக்பு வாரியத் தலைவர் ஜுபார் பரூக்கி, 'சீராய்வு மனுவை தாக்கல் செய்ய மாட்டோம்' என கூறியிருந்தார். அதே நேரத்தில் வாரியத்தின் சில உறுப்பினர்கள் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என, கூறி வருகின்றனர்.

இது குறித்து, ஜுபார் பரூக்கி கூறியதாவது: வாரியத்தின் சார்பில் முடிவு எடுக்கும் அதிகாரம் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் எந்தத் தீர்ப்பையும் ஏற்போம் என கூறியிருந்தோம். அதன்படி, தீர்ப்பை முழு மனதுடன் ஏற்கிறோம். சீராய்வு மனுவை தாக்கல் செய்யப் போவதில்லை. அதே நேரத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்ய சில உறுப்பினர்கள் விரும்பினால், வரும், 26ல் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுப்போம். அதேபோல் அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்க உள்ள நிலத்தை ஏற்பதா என்பது குறித்தும் விவாதிப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.
'சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்; அரசு வழங்கும் நிலத்தை ஏற்கக் கூடாது' என, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE