இந்த செய்தியை கேட்க
ஜம்மு : காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஏராளமான இடங்களில் அதிக திறன் கொண்ட வெடி பொருட்கள் மண்ணிற்குள் புதைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள குத்வானி பாலத்திற்கு அருகே அதிக திறன் கொண்ட 25 கிலோ அளவுடைய வெடி பொருட்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. பொது மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் இந்த வெடி பொருட்களை புதைத்து வைத்திருக்கலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து நேற்று முதல் தொடர்ந்து அப்பகுதியில் இந்திய ராணுவம், வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடத்தியது.

இதில், வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட 2 சிலிண்டர்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று 15 கிலோவும், மற்றொன்று 10 கிலோவும் வெடி பொருட்கள் நிரப்பப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்களை வெடிக்கச் செய்ததுடன், தொடர்ந்து அப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வெடி பொருட்கள் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் பெரிய உயிர் மற்றும் பொருட் சேதம் ஏற்பட்டிருக்கும் எனவும், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதை சிதைக்கவே இந்த முயற்சி நடந்துள்ளதாகவும், மக்கள் பயத்துடனேயே பயணிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தவே இது போன்று செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE