போபால்: ம.பி.,யில் ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் கணக்கில் மாதந்தோறும் மர்மமான முறையில் பணம் கூடிவந்ததால், கறுப்பு பணத்தை மீட்டு பிரதமர் மோடி வழங்கியதாக கருதி ஏமாற்றமடைந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் பின்த் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் ஸ்டேட் வங்கியில் ரூரை கிராமத்தை சேர்ந்த ஹூகும் சிங் என்பவரும், ரோனி கிராமத்தை சேர்ந்த ஹூகும் சிங் (இருவரது பெயரும் ஒன்றே) என்பவரும் ஒரே நாளில் கணக்கு தொடங்கினர்.
அவர்களுக்கு வங்கி மேனேஜர் ராஜேஸ் சொன்கர், வங்கி பாஸ்புக்கை வழங்கியுள்ளார். அதன்பின், ரூரை கிராமத்தை சேர்ந்த ஹூகும் சிங், ஹரியானாவிற்கு வேலைக்கு சென்று, அந்த வங்கி கணக்கில் பணம் போட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவரின் கணக்கில் ரூ. 1.40 லட்சமாக இருந்த பணம் திடீரென ரூ.35,400 ஆக குறைந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

சொந்த ஊருக்கு திரும்பிய ஹூகும், வங்கி கிளைக்கு சென்று விசாரித்தார். அப்போது தான் வங்கி கணக்கில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. அதாவது, ஒரே நாளில் ஒரே பேரை கொண்ட இருவருக்கும் (ரூரை கிராமத்தை சேர்ந்தவருக்கும்) வங்கி மேனேஜர் ஒரே அக்கவுண்ட் நம்பரை கொடுத்ததும், பணத்தை மற்றொரு ஹூகும் சிங் எடுத்ததும் தெரியவந்தது.
இதனால், மற்றொரு ஹூகும் சிங்கை அழைத்த மேனேஜர், அவரிடம் தவறை தெரியப்படுத்தி, எடுத்த பணத்தை கேட்டுள்ளார். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார் அவர்.

இது குறித்து ரூரையை சேர்ந்த ஹூகும் கூறுகையில், மாதந்தோறும் என் வங்கிக் கணக்கில் பணம் ஏறிவந்தது. கடந்த 6 மாதத்தில் ரூ. 89,000 அதிகரித்தது. பிரதமர் மோடி தான் கறுப்பு பணத்தை மீட்டு வங்கி கணக்கில் போட்டுள்ளார் என நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கு பணம் தேவைப்பட்டதால், அதை எடுத்து செலவழித்தேன். அந்த மகிழ்ச்சி நீடிக்காமல், மேனேஜர் பணம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் என்னிடம் பணம் இல்லை, என்றார். அந்த பணத்திற்கு இருவரும் மல்லுக்கட்டி வருவதால், தவறை ஒப்புக்கொண்ட வங்கி அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.