சென்னை: கோவையில் இளம்பெண் ராஜேஸ்வரி விபத்து நடந்த இடத்தில் கொடிகம்பம் எதுவும் இல்லை என தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் சமீபத்தில் முதல்வர் இபிஎஸ் வருகையையொட்டி சாலை ஓரத்தில் அதிமுக கொடிகம்பம் நடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அன்று காலை அந்த வழியாக மொபட்டில் சென்ற ராஜேஸ்வரி மற்றும் பைக்கில் சென்ற நித்யானந்தம் ஆகியோர் மீது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி மோதியது.
இதில், ராஜேஸ்வரியின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. நித்யானந்தமும் காயமடைந்தார். சிகிச்சையில் இருந்த ராஜேஸ்வரியின் இடது கால் அகற்றப்பட்டது. இச்சூழலில் ரோட்டில் வைத்திருந்த கொடி கம்பம் சாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. தகவலறிந்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார், லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகளிடம் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதில், இளம்பெண் ராஜேஸ்வரி விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிகம்பம் எதுவும் இல்லை எனவும், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை எனவும் விளக்கம் அளித்தது.
இதனையடுத்து, விதிமீறல் பேனர் தொடர்பான வழக்கில் அடுத்த கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், சுபஸ்ரீ வழக்கோடு ராஜேஸ்வரி வழக்கையும் சேர்த்து விசாரிக்க கோரி டிராபிக் ராமசாமி மனு அளித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE