புதுடில்லி:'அமளியால், சபை ஒத்தி வைக்கப்பட்டால், பூஜ்ய நேரத்தில் பேச அனுமதி கோரி, உறுப்பினர்கள் கொடுத்துள்ள, 'நோட்டீஸ்' ரத்து செய்யப்படும்' என, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு தெரிவித்தார்,.
பூஜ்ய நேரம்
பார்லிமென்டில், குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ராஜ்யசபாவில், காலை, 11:00 -12:00 மணி வரை, பூஜ்ய நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்த நேரத்தில், உறுப்பினர்கள், மக்கள் பிரச்னைகளை எழுப்பி பேசலாம். இதற்கு, உறுப்பினர்கள், சபை தலைவரிடம் முன் கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.
அமளியால் சபை ஒத்தி வைக்கப்பட்டால், மறுநாள், அந்த நோட்டீஸ்கள் எடுத்துக் கொள்ளப் படும். இந்நிலையில், சபை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று கூறியதாவது:உறுப்பினர்கள் சிலருக்கு, சபையில் அமளி யில் ஈடுபடுவது, ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. இதனால், சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
பிரச்னை
பூஜ்ய நேரத்தில் பேச, நாம் கொடுத்த நோட்டீஸ்கள், இன்று இல்லாவிட்டால், நாளை எடுத்துக் கொள்ளப்படும் என, உறுப்பினர்கள் கருதுகின்றனர். இனி, அமளியால் சபை ஒத்தி வைக்கப் பட்டால், பூஜ்ய நேரத்தில் பேச, உறுப்பினர்கள் கொடுத்த நோட்டீஸ்கள், மறுநாள் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. சிறப்பு அனுமதி பெற்றுதான், அந்த பிரச்னைகள் பற்றி உறுப்பினர்கள் பேச முடியும்.
மேலும், சபையில், போஸ்டர்கள், செய்தித் தாள்களில் வெளியான கட்டுரைகள் உட்பட எதையும் காட்டி, உறுப்பினர்கள் பேசக் கூடாது; அமளியில் ஈடுபடக் கூடாது. எந்த பிரச்னை பற்றியும் விவாதிக்க அனுமதிப்பது, சபை தலைவரின் தனிப்பட்ட உரிமை. இதில், யாரும் தலையிட முடியாது. ராஜ்யசபாவின், 250வது கூட்டம் நடந்து வரும் நிலையில், சபையை சுமுகமாக நடத்த, உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, வெங்கையா நாயுடு கூறினார்.
'நீங்கள் என்ன அமைச்சரா'
ராஜ்யசபாவில், பூஜ்ய நேரத்தின் போது, டில்லியில் மக்களுக்கு தரமில்லாத குடிநீர் வழங்கப் படுவதாக, பா.ஜ., உறுப்பினர் விஜய் கோயல் கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில், ''டில்லியில் குடிநீர் தரம் மிகவும் மோசமாக உள்ளது என, சமீபத்தில் வெளியான ஆய்வு தெரிவித்துள்ளது,'' என்றார்.இதற்கு, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங் எதிர்ப்பு தெரிவித்து, குறுக்கே பேசினார்.
''பா.ஜ., உறுப்பினர், குடிநீர் தரம் பற்றி மட்டுமே பேசுகிறார். அவர், எந்த அரசையும் குற்றம் சாட்டவில்லை.அதனால், நீங்கள் குறுக்கே பேசக் கூடாது,'' என, சஞ்சய் சிங்கிடம், சபை தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.ஆனாலும், விஜய் கோயல் பேசிய போது, குறுக்கே, சஞ்சய் சிங்கும் பேசினார். இதனால் கோபம் அடைந்த வெங்கையா நாயுடு, ''கேள்விகளை திருத்துவதற்கும், பதில் அளிப்பதற்கும் நீங்கள் என்ன அமைச்சரா,'' என, சஞ்சய் சிங்கிடம் கேட்டார். இதன் பின், சஞ்சய் சிங் இருக்கையில் அமர்ந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE