இணையதள போரை சமாளிக்க மத்திய அரசு தயார் அச்சம் வேண்டாம்! எதிரி நாடுகளின் சதி திட்டங்களை முறியடிக்க புது வியூகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இணையதள போரை சமாளிக்க மத்திய அரசு தயார் அச்சம் வேண்டாம்! எதிரி நாடுகளின் சதி திட்டங்களை முறியடிக்க புது வியூகம்

Updated : நவ 25, 2019 | Added : நவ 23, 2019 | கருத்துகள் (1)
Share
இந்தியாவில் பெருகி வரும் இணையதள பயன்பாட்டினால், தனிநபர் தகவல் தொடர்பிலும், வர்த்தக துறையிலும், வளர்ச்சிகள் வேகத்தை கூட்டினாலும், இதுவே, நாட்டின் பாதுகாப்புக்கு, பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும், எச்சரிக்கை மணி ஒலிக்கத் துவங்கி உள்ளது. நம் நாட்டில் உள்ள அணு உலைகளை குறி வைத்து, இணைய வழி போரைத் துவங்க, எதிரி நாடுகள் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. ஆனாலும்,
இணையதள போர், அச்சம் வேண்டாம், சதி, முறியடிக்க, வியூகம்

இந்தியாவில் பெருகி வரும் இணையதள பயன்பாட்டினால், தனிநபர் தகவல் தொடர்பிலும், வர்த்தக துறையிலும், வளர்ச்சிகள் வேகத்தை கூட்டினாலும், இதுவே, நாட்டின் பாதுகாப்புக்கு, பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும், எச்சரிக்கை மணி ஒலிக்கத் துவங்கி உள்ளது.

நம் நாட்டில் உள்ள அணு உலைகளை குறி வைத்து, இணைய வழி போரைத் துவங்க, எதிரி நாடுகள் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. ஆனாலும், இவ்விவகாரத்தில் விழித்துக் கொண்டுள்ள மத்திய அரசு, அந்த சதித்திட்டங்களை முறியடிக்க, புதிய வியூகங்களை வகுக்க துவங்கி விட்டதாக, இணையதள பாதுகாப்பு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. துாத்துக்குடி மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணு மின் நிலையத்தின் இரண்டாவது உலையில், 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணு உலை, கடந்த அக்டோபர் மாதம், திடீரென மூடப்பட்டது.வழக்கமான பராமரிப்பு பணி என, முதலில் கூறப்பட்டாலும், அணு உலையின் கணினிகள், 'ஹேக்கர்கள்' எனப்படும், இணைய பயங்கரவாதிகளால், முடக்கப்பட்டதாக தகவல் கசிந்தது.

இதை, இணையதள பாதுகாப்பு நிபுணர் புக்ராஜ் சிங் என்பவர், உறுதிப்படுத்தினார். இவர், மத்திய அரசின், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியாக பணியாற்றியவர். தாக்குதல்'கணினிகளை செயலிழக்கச் செய்யும், 'மால்வேர்' எனப்படும் வைரஸ்களால், கூடங்குளம் அணு உலையின் கணினிகள் தாக்குதலுக்கு உள்ளானது' என, அவர் தெரிவித்தார்.'கூடங்குளம் அணு உலையின் கணினிகள், 'டி - டிராக்' எனப்படும் வைரசால் தாக்கப்பட்டதாகவும், இது, கிழக்காசிய நாடான வட கொரியாவின் உளவு அமைப்பினரால் உருவாக்கப்பட்டது' என்றும், இணையதள வைரஸ் பாதுகாப்பில் முன்னணி வகிக்கும், 'கேஸ்பர்ஸ்கை' நிறுவனம் தகவல் வெளியிட்டது.

இதையடுத்து, கூடங்குளம் அணு உலையின் பயிற்சி கண்காணிப்பாளரும், தகவல் பிரிவு அதிகாரியுமான ராமதாஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூடங்குளம் உட்பட, நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளின் கணினிகளும், தனி சிறப்பு வாய்ந்த தொழில்நுட்பம் கொண்டவை. அவை, இணைய பொது வெளியுடன் இணைக்கப்படவில்லை. எனவே, அவற்றை வெளியாட்கள் முடக்க, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

ஆனால், இரண்டு நாட்களுக்கு பிறகு, கூடங்குளம் கணினிகள், வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானதாக, இந்திய அணு மின் கழகம் ஒப்புக் கொண்டது.அணு மின் உற்பத்தியில், இந்தியா பல எதிர்கால திட்டங்களை வகுத்துள்ளது. நாடு முழுவதும், 9,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணு மின் நிலையங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், 6,700 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, ஒன்பது நிலையங்களின் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. மேலும், மஹாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 25 ஆயிரத்து, 248 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணு மின் நிலையங்களை துவங்க, பூர்வாங்க ஒப்புதலை, மத்திய அரசு வழங்கி உள்ளது.எனவே, நாட்டின் மின் கட்டமைப்புகள் மீது, இணைய தாக்குதல்கள் நடத்துவதன் மூலம், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைப்பதே, பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு என, கூறப்படுகிறது.


அவசரம்


நிலம், நீர், ஆகாயம், விண்வெளி என, அனைத்திலும் தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்தி உள்ள மத்திய அரசு, இணைய பாதுகாப்பிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டிய அவசரத்தில் உள்ளது.இந்நிலையில், இது போன்ற இணைய அச்சுறுத்தல்களுக்கு பதிலடி தர, மத்திய அரசு தயாராக உள்ளதா என்ற கேள்வி, தற்போது எழுந்துள்ளது. இது குறித்து, இணையதள பாதுகாப்பில் முன்னணி நிறுவனமான, 'சைமேன்டெக்' மூத்த அதிகாரி கூறியதாவது: அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தான், இணைய தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இந்த தாக்குதல்கள், அணு உலைகளை மட்டும் குறிவைக்காமல், பல்வேறு துறைகள் மீதும் நிகழ்த்தப்பட வாய்ப்புள்ளன.

இதனால், இந்தியா 'டிஜிட்டல்' மயமாவதில் தீவிரம் காட்டும் அதே வேளையில், இணையப் பாதுகாப்பையும், போர்க்கால அடிப்படையில் உறுதிப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில், ஐரோப்பிய நாடான எஸ்தோனியாவிடம் இருந்து, நாம் பாடம் கற்க வேண்டும். ஒருங்கிணைந்த ரஷ்யாவிடம் இருந்து, 1991ல் எஸ்தோனியா தனியாக பிரிந்து வந்தது. தங்களிடம் இருந்த மிக குறைந்த கட்டமைப்பை கொண்டு, டிஜிட்டல் முறைக்கு, கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஒருகட்டத்தில், அனைத்து அரசு துறைகளும், டிஜிட்டல் மயமாகின. இந்த நேரத்தில், 2007ல், எஸ்தோனியா, கடுமையான இணைய தாக்குதலுக்கு ஆளானது. அனைத்து அரசு சேவைகளும் முடங்கின. இந்த தாக்குதலுக்கு பின், ரஷ்யாவின் சதி இருப்பதாககூறப்பட்டது.


பாதுகாப்பு


இந்த சம்பவத்துக்கு பின், இணையதள தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்து, அதை தகர்த்தெறியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை, அந்நாடு செயல்படுத்தியது. இணைய பாதுகாப்பு துறையில், உலக அளவில் முன்னணி வகிக்கும் ஐந்து நாடுகளில், எஸ்தோனியா இடம்பெற்றுள்ளது.இந்நிலையில், இணையதள பாதுகாப்பு விஷயத்தில், சமீபத்தில், இந்தியா - எஸ்தோனியா இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம், இணையதள தாக்குதல்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை, மத்திய அரசு முன்னெடுக்க துவங்கி உள்ளது தெளிவாகிறது.எனவே, அணு உலைகள் உட்பட, பல்வேறு துறைகள் மீதான இணைய தாக்குதல்கள் குறித்து, யாரும் அச்சப்படத் தேவையில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X