மனசாட்சி இல்லா மாக்கள்!
பிற நாடுகளின் முக்கிய தலைவர்கள், நம் நாட்டுக்கு வரும் போது தான், நம் சாலைகளும், ஊரும் துாய்மையாகும்; குப்பை கழிவுகள் அகற்றப்படும்; கோலமாவு வட்டம் போடப்படும். சமீபத்தில், சீன அதிபரின் வருகைக்காக, சென்னை விமான நிலையம் முதல், அவர் பயணித்த அத்தனை துாரமும் பளிச்!மாமல்லபுரமோ அழகு கொஞ்சியது. நம் மகாபலிபுரம், இவ்வளவு அழகானதா என, விழிகள் விரிந்தன. நேர்த்தியான புல் தரைகள், புதுப்பொலிவுடன் காணப்பட்ட சிற்பங்கள் என, அழகு மிளிர்ந்தது. அந்த சுற்றுலாத்தலம், எப்போதும் துாய்மையாக இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் நம் உள்ளத்திலும் தோன்றியது.சீன அதிபர் சென்று விட்ட மறு நாளே, மகாபலிபுரத்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. தாங்கள் கொண்டு வந்து சாப்பிட்ட உணவுப் பொருட்களின் அட்டைகள், தண்ணீர் குடுவைகள், தின்பண்டங்களின் மேலுறைகள் என, எல்லா குப்பையையும் அங்கேயே வீசி விட்டுச் சென்றது தான் அவலம்.
மீண்டும் குப்பைக் காடான அந்த இடத்தைப் பார்த்ததும், மனதில் வலியும், வேதனையும் மிகுந்தது. ஏன் இப்படி, நம் மக்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றனர் என்ற கேள்வி எழுந்தது. வெளிநாடுகள் எப்போதும் சுத்தமாக இருக்கின்றன. 'எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி, ஒழுங்கு' என, நாம் வியந்து போகிறோம்.
நம் வீடுகளில் உள்ள மனப்பான்மை என்னவென்றால், விருந்தினர் வருகின்றனர் என்றால் மட்டுமே, நம் சாளரங்கள் சட்டை போட்டுக் கொள்ளும்; சாமான்கள் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளும்; சுவரின் ஒட்டடை நீக்கப்படும். நம்மை பொறுத்தவரை வீடும், நாடும் ஒன்று தான். குப்பையாகத் தான் வைத்திருப்போம். ஆனால், தேவை எனில், கிடுகிடுவென காரியத்தில் இறங்குவோம். உதாரணத்திற்கு, அமெரிக்க அதிபர், நம் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கப் போகிறார் என்று, முதல் நாள் தான் தெரிந்தது என்றாலும் போதும். ஒரே நாளில், நாடு முழுவதையுமே கழுவித் துடைத்து, துாய்மை செய்து விடுவர், நம் அதிகாரிகள்.மேலும், நம் மக்களுக்கு எங்கே, எதற்காக வெளியே கிளம்பினாலும், சோத்து மூட்டை, தின்பண்டம் வேண்டும். கோவில், கடற்கரை, பூங்கா என, எங்கே சென்றாலும், எதையாவது கொறிக்க வேண்டும்; அதில் தவறில்லை. ஆனால், அந்த இடத்தை அசுத்தம் செய்வதை, எப்படி நியாயப்படுத்த முடியும்?குப்பைத் தொட்டிகள் நிரம்பி, தெருவெங்கும் குப்பை சிதறிக் கிடக்கின்றன. போதாததற்கு சுற்றித் திரியும் மாடுகளும், நாய்களும், குப்பைத் தொட்டியில் இருந்து, குப்பையை வெளியே இழுத்துப் போடுகின்றன. அந்த இடத்தின் துர்நாற்றம் சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது.
தற்போது, வீடு வீடாக வந்து, மக்கும் குப்பை, மக்கா குப்பை என, சேகரிக்கின்றனர். குப்பை வண்டி வரும் போது, பலரும் வேலைக்குப் போய் விடுகின்றனர். குப்பை போடுவதற்கு ஆள் இல்லாததால், அவர்கள் வெளியே போகும் போது, வழியில் எங்காவது வீசி சென்று விடுகின்றனர்.
ஊர் அசிங்கமாக இருந்தால் என்ன; நாற்றமெடுத்தால் என்ன; வீடு சுத்தமாகிவிட்டது என்ற நினைப்பு அவர்களுக்கு!படித்தவர்களிடம் கிஞ்சித்தும், சமூக அக்கறை இல்லாதது வேதனை அளிக்கிறது. இவ்வாறு பொறுப்பில்லாமல் இருப்பவர்கள் தான், 'அரசு என்ன செய்ய வேண்டும்; அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும்' என, நீளமாகப் பேசுவர்.ஒரு காலி மனை இருந்தால் போதும், அங்கே ஒரு குப்பை மேடு உருவாகி விடும். சாலை ஓரத்தில் கடை விரிப்போர், குப்பையை அங்கேயே போட்டுப் போவர். உலகில் நம்மைத் தவிர வேறு எவரும், அதிகாலை எழுந்து, வாசல் பெருக்கி,கோலம் போடுவது கிடையாது. அப்படி இருந்தும், ஏன் நம் தெருக்கள், துாய்மையாக இல்லை? காரணம், நம் வீட்டு குப்பையை, தெருவுக்குப் பெருக்கித் தள்ளி விடுகிறோம். நாம் வீசும் அழுகலையும், அசுத்தத்தையும் எந்த இயந்திரமும் அள்ளுவது இல்லை; நம் சக மனிதன் தான், கையுறை கூட இல்லாமல் அந்த குப்பையை அள்ளுகிறான். குப்பை வண்டியைக் கடக்கும் போது, மூக்கைப் பொத்திக் கொள்கிறோம். அதில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் நறுமணமாகவா இருக்கும்? வயிற்றுப் பிழைப்புக்காக, அவர்கள் அந்த வேலையைச் செய்கின்றனர். பார்க்கப் போனால், துப்புரவுப் பணியாளர்களுக்கு, நல்ல சம்பளம் தரப்பட வேண்டும். குப்பை அள்ளுவோர், குப்பை மேட்டில் தான் வசிக்க வேண்டும் என்பது விதியா; அவர்கள் இல்லாவிட்டால் நம் ஊர் நாறிப் போய் விடும். புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடருக்குப் பின், மலை போல குவிந்த குப்பையை அகற்றியதும், நம் போல் மனிதர்கள் தானே... குப்பைக் கழிவுகளைக் கண்ட இடங்களில் வீசுவதற்கு முன், குப்பை அகற்றும் மனிதர்களைப் பற்றி நினைத்துப் பார்த்தால், கை தானாக உள் இழுத்துக் கொள்ளும்; குப்பையை வீசாது. நள்ளிரவில், இறைச்சிக் கழிவுகளை, சாலை ஓரங்களில் கொட்டி போவோர்; கழிவு நீரை நீர் நிலைகளில் விடுவோர் போன்றோருக்கு கடுமையான தண்டனை தரப்பட வேண்டும்.
மனசாட்சி இல்லா மாக்கள் அவர்கள்.
ஒவ்வொரு பண்டிகையின் போதும், நாம் அதிக அளவு குப்பையை உருவாக்குகிறோம். பொது விழாவை முன்னின்று நடத்துபவர்கள், நிகழ்ச்சி முடிந்ததும், அந்த இடத்தை சுத்தம் செய்வதும் தம் கடமை என நினைப்பது இல்லை; எப்போது திருந்துவோம் நாம்...குப்பை போடுவதைத் தடுக்க, நகரம் பூராவும், காவலர்களை நியமிக்க முடியுமா; மக்களைத் திருத்த வேண்டும். பேருந்து பயணத்தின் போது வெளியே தலையை நீட்டி, எச்சில் துப்புவோரையும், பழத் தோல்களை வீசி எறிவோரையும், சிறு வியாபாரிகளையும், கடைக்காரர்களையும் தடி எடுத்தா திருத்த முடியும்?மருத்துவக் கழிவுகளையும், திருமண மண்டபக் கழிவுகளையும், தெருவில் கொட்ட முடியாது. அவை, முறைப்படி அகற்றப்படுகின்றன. அதே போல, நம் வீடுகளில் நடக்கும், சிறிய விருந்து அல்லது சுப நிகழ்ச்சிகளின் போது சேரும் குப்பையை, நாம் முறைப்படி அகற்ற, ஏதாவது ஒரு எளிய வழியை பின்பற்ற வேண்டும். பெருகி வரும் மக்கள் பெருக்கத்தின் காரணமாக, குப்பை மேலாண்மை, தற்போது பெரிய சவாலாக உள்ளது. நகரின் துாய்மைக்காக, அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வந்தாலும், அதற்குத் தீர்வு கிட்டவில்லை. இந்தப் பிரச்னைக்கு தீர்வு, மக்களிடையே தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்!இல்லாவிட்டால், தினமும் ஏதாவது ஒரு நாட்டு அதிபரை, இங்கே வரச் செய்ய வேண்டும். அப்போது தான், அவசர அவசரமாக, நம் ஊர் அரிதாரம் பூசிக் கொள்ளும்!தொடர்புக்கு: இ - மெயில்: insuvai16@yahoo.comமொபைல் எண்: 94440 34330