நடு இரவில் நடந்த அதிரடி

Added : நவ 23, 2019
Advertisement
நடு இரவில் நடந்த அதிரடி


நடு இரவில் நடந்த அதிரடி



சனிக்கிழமை காலையில், நாளிதழ்களை பிரித்தவர்கள் அனைவரும், 'மஹாராஷ்டிர முதல்வராக, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார்' என்ற தலைப்புச் செய்தியைப் படித்தனர். பத்திரிகையை படித்து முடித்த பின், 'டிவி' பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி- காத்திருந்தது. அதில், 'பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ், மஹாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார்' என, 'பிரேக்கிங் நியூஸ்' ஓடிக் கொண்டிருந்தது. நாளிதழ் சொல்வது உண்மையா அல்லது 'டிவி' காட்டுவது உண்மையா என, அனைவரும் குழம்பினர். இடையில் என்ன நடந்தது?மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்க, 22ம் தேதி இரவு, 9:00 மணி வரையிலும், காங்-கிரஸ், தேசியவாத காங்கிரஸ், -சிவசேனா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருந்தனர். '23ம் தேதியும் முக்கிய சந்திப்பு நடைபெற உள்ளது; உத்தவ் தாக்கரே தான் முதல்வர்' என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் உறுதியாக சொன்னார். ஆனால், 22ம் தேதி இரவு, 11:00 மணியிலிருந்து, காலை, 4:00 மணி வரையிலும் இரண்டு தலைவர்கள் துாங்கவேயில்லை. ஒருவர் சரத் பவார். இன்னொருவர் பிரதமர் மோடி. மஹாராஷ்டிராவில் பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சியமைக்க, என்னென்ன செய்ய வேண்டும் என, அவர்கள் இருவரும் ஆலோசித்து முடிவு செய்தனர்.மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. முதலில் அதை ரத்து செய்வற்காக, இரவோடு இரவாக முயற்சிகள் எடுக்கப்பட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு, இது தொடர்பான ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவரும், அதிகாலையில் அதில் கையெழுத்திட்டார்.இந்த விஷயம், படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மீடியாவிற்கு இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. காலையில் கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார். சரத் பவாரின் உறவினரும், தேசியவாத காங்., கின் சட்டசபை குழு தலைவருமான அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.இந்த பதவியேற்பு விழா, எந்த 'டிவி'யிலும், 'லைவ்' ஆக ஒளிபரப்பப்படவில்லை. பதவியேற்பு விழா சுருக்கமாக முடிந்த பிறகு, ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம், இந்த காட்சிகளை, அனைத்து, 'டிவி'க்களுக்கும் வழங்கியது. இந்திய அரசியல் வரலாற்றில், ஒரு முதல்வரின் பதவியேற்பு விழா, இவ்வளவு ரகசியமாக நடைபெற்றது இதுதான் முதல் முறை.


மோடி, -சரத் பவார் சந்திப்பு



இந்த, திடீர் திருப்பம் நடப்பதற்கு, ஒரு சில நாட்களுக்கு முன் தான், சரத் பவார், பிரதமர் மோடியைச் சந்தித்தார். மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க, சிவசேனா,- தேசியவாத காங்., -காங்கிரஸ் தீவிர பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கும் போது, எதற்கு இந்த சந்திப்பு என, சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் பலர் சந்தேகப்பட்டனர்.'மஹாராஷ்டிரா விவசாயிகள் நிலை குறித்து விளக்கவே, பவார் பிரதமரை சந்தித்தார்' என, அவர் கட்சி சார்பில் சொல்லப்பட்டது. சிவசேனாவும் கூட, 'நாங்கள் தான் பவாரை பிரதமரைச் சந்திக்க சொன்னோம்' என்றது. மோடி, பவார் சந்திப்பின் போது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடன் இருந்தனர். சில நிமிடங்களுக்குப் பின், அமைச்சர்கள் இருவரும் வெளியேற, மோடியும், பவாரும் தனியாக, அரை மணி நேரம் பேச்சு நடத்தினர். இந்த சந்திப்பிற்குப் பின் வெளியே வந்த பவார், 'பிரதமரிடம், விவசாயிகள் நிலை குறித்து தான் பேசினேன்; மஹாராஷ்டிரா அரசியல் தொடர்பாக எதுவுமே பேசவில்லை' என்றார்.ஆனால், அந்த சந்திப்பில், மஹா., அரசியல் குறித்து தான் பேசப்பட்டதாம். மாநிலத்தில் ஆட்சி அமைத்தால், யார் யாருக்கு என்ன பதவி தருவது என்பது குறித்து, இரண்டு தலைவர்களும் முடிவு செய்தனராம். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ், மத்திய அரசில் இணையும் என சொல்லப்படுகிறது. பவாரின் மகள் சுப்ரியா சுலே மத்திய அமைச்சராவார் எனவும் சொல்லப்படுகிறது.ஆனால், பிரதமருடனான சந்திப்பில் நடந்ததை மறைத்து, 'எனக்கும், இந்த முடிவிற்கு சம்பந்தம் இல்லை; பா.ஜ., அரசுக்கு ஆதரவு தரும் முடிவு, அஜித் பவாருடையது' என, சரத் பவார் இப்போது சொல்கிறார். என்றாலும், இதை யாருமே நம்ப தயாராக இல்லை.'பவார் கடைசியில் காலை வாருவார் என, முதலிலேயே சந்தேகப்பட்டோம்; அது, உண்மையாகிவிட்டது. அவர், ஏற்கனவே இப்படி செய்தவர்தான்' என்கிறார், சீனியர் காங்., தலைவர் ஒருவர். 'சரத் பவாரின் அனுமதி இல்லாமல், பா.ஜ.,விற்கு ஆதரவளிக்க, அஜித் பவார் முடிவு எடுத்திருக்க மாட்டார்' எனவும் காங்கிரசார் சொல்கின்றனர். தவிர, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், பா.ஜ.,விற்கு ஆதரவு அளிப்பதாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்து விட்டனராம்.மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, 'சிவசேனா நிச்சயம் பிரச்னை ஏற்படுத்தும்; எனவே. தேசியவாத காங்., கட்சி ஆதரவோடு ஆட்சி அமைப்பது தான் சரிப்பட்டு வரும்' என, மோடியும், அமித் ஷாவும், முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.


அதிர்ச்சியில் காங்., - -சிவசேனா



காங்., தலைவர் சோனியா, சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முதலில் தயக்கம் காட்டினார். 'சிவசேனா முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி; அக்கட்சியுடன் சேர்ந்தால், நம் ஓட்டு வங்கி பாதிக்கப்படும்' என, சோனியா யோசித்தார். கேரளா காங்கிரசும், இந்த கூட்டணி வேண்டாம் என சோனியாவிடம் சொன்னது.ஆனால், காங்.,- எம்.எல்.ஏ.,க்களின் நிர்ப்பந்தத்தால், வேறு வழியில்லாமல் சோனியா ஒத்துக் கொண்டார். ஆனால், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க, அவர் பல நிபந்தனைகளை விதித்தார். இதனால், உடனடி முடிவு எடுக்க முடியாமல், நாட்கள் இழுத்துக் கொண்டே போனது. இதனால், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் வெறுத்துப் போயினர். இதைப் பயன்படுத்திக் கொண்டு, பா.ஜ., தன் காரியத்தை சாதித்துவிட்டது என்கின்றனர் காங்கிரசார். சோனியா இத்தனை நாட்கள் தாமதப்படுத்தியிருக்கக் கூடாது எனவும் காங்கிரசார் கூறுகின்றனர்.இதற்கிடையே, சிவசேனா கட்சி உடையும்; சில, எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ., பக்கம் தாவுவர் என, சொல்லப்படுகிறது. உத்தவ் தாக்கரே முதல்வராக வேண்டும் என, உறுதியாக இருந்தவர் அவருடைய மனைவி ராஷ்மி தாக்கரே. ஆனால், உத்தவ், அவருடைய மகன் ஆதித்ய தாக்கரே இருவருடைய அரசியல் முடிவுகளும், சிவசேனாவின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X