பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டில் கவர்னர்களுக்கு.. முக்கிய பங்கு!  மாநாட்டை துவக்கி வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

 பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டில் கவர்னர்களுக்கு.. முக்கிய பங்கு!  மாநாட்டை துவக்கி வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

Updated : நவ 25, 2019 | Added : நவ 23, 2019 | கருத்துகள் (5)
Share
 பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், மேம்பாட்டில், கவர்னர்களுக்கு, முக்கிய பங்கு!,ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ,பேச்சு

புதுடில்லி : ''பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோரின் மேம்பாட்டில், கவர்னர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்களின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சியுடனும், உள்நாட்டு பாதுகாப்புடனும் இணைந்துள்ளது,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

மாநில கவர்னர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் லெப்டி-னென்ட் கவர்னர்களின், 50வது மாநாடு, டில்லியில் துவங்கியது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:கவர்னர்கள் அனைவரும், பொது வாழ்க்கையில் பல ஆண்டு அனுபவம் உள்ளவர்கள். அதன் பலனை, மக்கள் பெற வேண்டும்.


மக்கள் நலன்



அரசியல் சட்டத்தை பாதுகாப்பதுடன், கவர்னர்களின் பணி முடிந்து விடவில்லை. மாநில மக்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டிய கடமை, அவர்களுக்கு உள்ளது. நாம் அனைவருமே, மக்களுக்காக தான் பணியாற்றுகிறோம்; மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது.மத்திய மற்றும் மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, மக்களின் நலனுக்கான கொள்கைகளை உருவாக்குகின்றன. இது தான், கூட்டாட்சி தத்துவம்.

வளர்ச்சியில், மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவது, ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கிறது. மாநிலங்களுக்கு இடையே போட்டியை வலுப்படுத்தும் வகையில், திட்டக்கமிஷனுக்குப் பதிலாக, 'நிடி ஆயோக்' அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் மட்டுமே, நாடு உண்மையான வளர்ச்சியை பெற முடியும்.

பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, அவர்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும். இதில், நாட்டின் வளர்ச்சி மட்டுமல்ல, உள்நாட்டு பாதுகாப்பும் அடங்கியுள்ளது.கவர்னர்கள் தங்களுக்கு, அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இம்மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும். நீர் வளங்களை பாதுகாப்பது தான், நாட்டுக்கு இன்று தேவையான ஒன்றாக உள்ளது.

'துாய்மை இந்தியா' திட்டம் போல, 'ஜல் சக்தி அபியான்' திட்டத்தையும், மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். உலகின் அறிவு மையமாக, இந்தியாவை மாற்றுவது தான், நம் புதிய கல்வி கொள்கையின் இலக்கு. இந்த இலக்கை நிறைவேற்ற, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், ஆராய்ச்சி மற்றும் கண்டு பிடிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பல்கலைகளின் வேந்தர்களாக உள்ள கவர்னர்கள், இதற்கு வழிகாட்ட வேண்டும். இவ்வாறு, ராம்நாத் கோவிந்த் பேசினார்.

மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கவர்னர்கள், மக்களின் தேவைகளை கேட்டு, அதை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும்.


பாதுகாக்கும் பொறுப்பு

குறிப்பாக, பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகளின் நலன்களுக்கான பணிகளில், கவர்னர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். அடுத்து, கவர்னர்கள், மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி, அரசின் நல திட்டங்கள் மக்களை சென்றடைய முயற்சிக்க வேண்டும். நாம், 2022ல், 75ம் ஆண்டு சுதந்திர தினத்தையும், 2047ல், 100வது சுதந்திர தினத்தையும் கொண்டாட உள்ளோம்.

அதனால், அரசு நிர்வாகத்தை, மக்களிடம் நெருக்கமாக கொண்டு செல்வதில், கவர்னர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.இந்திய அரசியல் சட்டம் ஏற்கப்பட்டு, 70ம் ஆண்டு நிறைவை கொண்டாடுகிறோம். இந்த அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு, கவர்னர்களிடம் தான் உள்ளது. வரும், 2025ம் ஆண்டுக்குள், இந்தியாவை, காசநோய் இல்லாத நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பற்றி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில், கவர்னர் அலுவலகங்கள் ஈடுபட வேண்டும்,இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.


காஷ்மீர், லடாக் கவர்னர்கள் பங்கேற்பு

ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, மாநிலத்தை, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இரு யூனியன் பிரதேசங்களும், அக்டோபர், 31ல் செயல்பாட்டுக்கு வந்தன. ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னராக, ஆர்.கே.மாத்துாரும், லடாக் கவர்னராக மர்முவும் பதவியேற்றனர். டில்லியில், நடந்த கவர்னர்கள் மாநாட்டில், இருவரும் பங்கேற்றனர்.

ஜனாதிபதி தன் உரையில், இரண்டு கவர்னர்களையும் வரவேற்று பேசினார். பிரதமர் மோடியும், இரண்டு யூனியன் பிரதேசங்கள் பற்றி, தன் பேச்சில் குறிப்பிட்டார். மாநாட்டில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரும் பங்கேற்றனர். மாநாடு, இன்று நிறைவு பெறுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X