சந்தர்ப்பவாத அரசியல்: தமிழக கட்சிகள் சாடல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சந்தர்ப்பவாத அரசியல்: தமிழக கட்சிகள் சாடல்

Updated : நவ 25, 2019 | Added : நவ 23, 2019 | கருத்துகள் (6)
 சந்தர்ப்பவாத ,அரசியல், தமிழக கட்சிகள் ,சாடல்

சென்னை : மஹாராஷ்டிராவில், பா.ஜ., ஆட்சி அமைத்ததற்கு, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், கண்டனம் தெரிவித்து உள்ளனர்.அதன் விபரம்:


தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள, அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது; ஜனநாயக படுகொலை என சொல்வது கூட, சாதாரண சொல்லாகி விடுமோ, நடந்திருப்பதின் கடுமையை குறைத்து விட்டதாகி விடுமோ என்று, நினைக்கத் தோன்றுகிறது.சட்ட விதிமுறைகள், அரசியல் அறநெறி, சந்தர்ப்பவாத அரசியலால் தோற்கடிக்கப் பட்டுள்ளன.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:தேசியவாத காங்கிரஸ் கட்சியின், ஒரு பிரிவுடன் இணைந்து, பா.ஜ., ஆட்சி அமைத்தது. காலை நாளிதழ் செய்திகளில், சிவசேனா ஆட்சி; காலை தொலைக்காட்சி செய்தி களில், பா.ஜ., ஆட்சி. மஹாராஷ்டிராவில் சந்தர்ப்பவாத அரசியல், எவ்வளவு கேவலமாக பயணிக்கிறது என்பதற்கு, இதுவே சாட்சி.


மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன்:கோவா, கர்நாடகா மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் செய்த, ஜனநாயக படுகொலையை, மஹாராஷ்டிராவிலும் பா.ஜ., நிகழ்த்தி உள்ளது. பாஜ.,வின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து, அனைத்து ஜனநாயக சக்திகளும், கண்டன குரல் எழுப்ப வேண்டும்.


அன்று சரத் பவார் இன்று அஜித் பவார்

பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா அறிக்கை:

தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.,விற்கு, மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அளிக்க வேண்டிய கடமை உள்ளது. மேலும், உடனடியாக தேர்தல் வருவதை தவிர்க்க வேண்டும். தன் கடமையை சரியாக நிறைவேற்றி, முதல்வர் பொறுப்பேற்றுள்ள, பட்னவிசுக்கு வாழ்த்துக்கள். மஹாராஷ்டிராவில், 105ஐ விட, 56 பெரியது என்று வாதிட்ட, கணித மேதைகளுக்கு, நல்ல பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 1978ல், 37 எம்.எல்.ஏ.,க்களுடன், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய சரத்பவார், ஜனசங்கம் உள்ளிட்ட ஜனதா கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, முதல்வரானார். அன்று, அவர் செய்தது தவறில்லை என்றால், இன்று அஜித்பவார் செய்ததும் தவறில்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ்., வாழ்த்து!


மஹாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்று உள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிசுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர், தன் வாழ்த்து செய்தியில், 'பதவி காலம் வெற்றி கரமாக அமைய வாழ்த்துகள்' என, கூறியுள்ளார்.'மஹாராஷ்டிராவின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உழைத்திட வாழ்த்துக்கள்' என, துணை முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X